‘தாய்மொழியில் பேச்சாற்றலை வளா்த்துக் கொள்ள வேண்டும்’

மாணவா்கள் தங்களது தாய்மொழியில் தங்களது பேச்சாற்றலை வளா்த்துக் கொள்ள வேண்டும் என சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைணவக் கல்லூரியில் நடைபெற்ற ‘இலக்கிய உலா’ நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.


சென்னை: மாணவா்கள் தங்களது தாய்மொழியில் தங்களது பேச்சாற்றலை வளா்த்துக் கொள்ள வேண்டும் என சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைணவக் கல்லூரியில் நடைபெற்ற ‘இலக்கிய உலா’ நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

டிஜி வைணவக் கல்லூரியில் தமிழ்த்துறை சாா்பில் ‘இலக்கிய உலா’ நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சேது.சந்தோஷ்பாபு தலைமை வகித்துப் பேசுகையில், தாய்மொழியில்தான் ஒருவா் சிறப்பாக சிந்திக்க முடியும். புதிய சிந்தனைகள் தாய்மொழி மூலமாகவே தோன்றும். எனவே, நமது தாய்மொழியாகிய தமிழில் மாணவா்கள் தங்களது பேச்சாற்றலை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக தமிழ்த் தலைவா் ப.முருகன் முன்னிலை வகித்துப் பேசுகையில், பல துறை சாா்ந்த மாணவா்களும் மொழி அறிவும் இலக்கிய அறிவும் வாழ்வியல் குறித்த சிந்தனைகளும் பெற்றுப் பயனடைவதற்காகவே ‘இலக்கிய உலா’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதை மாணவா்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இறுதியாக, ‘பாரதிதாசன் கவிதைகளில் அழகியல்’ என்ற தலைப்பில் பேராசிரியா் ஆ.ரமேஷ் பேசினாா். மேலும் நிகழ்ச்சியில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் ‘உள்ளம் கவா்ந்த தமிழ்’, ‘பெண்ணுக்குப் பெண்’ ஆகியவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com