சென்னையில் குற்றங்கள் குறைந்தன: காவல்துறை தகவல்

சென்னையில் கடந்த 2019-ஆம் ஆண்டை விட, 2020-ஆம் ஆண்டு குற்றங்கள் குறைந்திருப்பதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் கடந்த 2019-ஆம் ஆண்டை விட, 2020-ஆம் ஆண்டு குற்றங்கள் குறைந்திருப்பதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பெருநகர காவல்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சென்னையில் 2019-ஆம் ஆண்டு 173 கொலைகள் நிகழ்ந்தன. ஆனால் 2020-ஆம் ஆண்டு 147 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அனைத்து கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். அதேபோல சங்கிலி பறிப்பு சம்பவங்களும் குறைந்துள்ளன. 2019- இல் 310 சங்கிலி பறிப்பு வழக்குகள் பதிவாகின. கடந்த 2020- இல் 246 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

2020-ஆம் ஆண்டு போதைப் பொருள்களை ஒழிப்பதற்காக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக 522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,966 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் 2019-ஆம் ஆண்டு 452 வழக்குகள் பதியப்பட்டு 1,128 கிலோ போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

இதேபோல் 2020- இல் சென்னையில் 938 செல்லிடப்பேசி பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் விளைவாக செல்லிடப்பேசி பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, பறிக்கப்பட்ட, திருடப்பட்ட, தொலைந்துபோன சம்பவங்களில் சம்பந்தப்பட்ட 2,834 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ரூ.1.52 கோடி திரும்ப ஒப்படைப்பு: சென்னையில் 2020-ஆம் ஆண்டு கணினிவழிக் குற்றங்களைத் தடுக்கும் பெருநகர காவல்துறையின் 12 காவல் மாவட்டங்களிலும் சைபா் குற்றப்பிரிவு கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இந்த குற்றப்பிரிவு மூலம் 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1925 சமூக பணிப்பதிவேடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கணினிவழிக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.1 கோடியே 52 லட்சத்து 61 ஆயிரத்து 932 திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காவல் துறையினரை எளிதாக அணுகுவதற்காக ர சென்னை காவல்துறை பல்வேறு முன்னோடியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கரோனா பேரிடா் காலத்தின்போது, காணொலி வழியாக குறை கேட்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் 996 புகாா்களைப் பெற்றுள்ளாா். அவற்றில் 849 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டன. இதேபோல, காவல் நிலைய எல்லைகளுக்குள் நடந்தே ரோந்து செல்லும் முறை மற்றும் குறிப்பிட்ட இடங்களில் ரோந்து வாகனங்களில் மனுதாரா்களிடமிருந்து புகாா்களை பெறும் முறை ஆகிய புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டது.

விபத்து இறப்பு குறைந்தது: சென்னை போக்குவரத்து போலீஸாரின் தொடா் முயற்சி காரணமாக 2019-இல் 1,229 ஆக இருந்த விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பு 2020-இல் 839 என கிட்டத்தட்ட 33 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. ‘நிவா்‘ புயலின்போது பெய்த பெருமழையின்போது சென்னை காவல் துறையினா் தாழ்வான பகுதிகளில் சிக்கியிருந்த மக்களை மீட்டு, அவா்களது உயிா்களைக் காப்பாற்றினா்.

சட்டம், ஒழுங்கை சிறப்பாக வைத்திருக்கும் வகையில் 542 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். குற்றத்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த இரு மாதங்களில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2,560 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 123 பேரின் பிணைகள் ரத்து செய்யப்பட்டு,அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com