சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல்: கரோனாவால் 36 சதவீதம் குறைந்தது

சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக கடந்தாண்டு 28.70 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக கடந்தாண்டு 28.70 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விவரம்:

சென்னையில் விபத்துகளைத் தடுப்பதற்காகவும், சாலை விதிமுறைகளை பின்பற்ற வைக்கும் வகையிலும் பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பான வழக்குகள் கடந்த காலங்களில் அதிகளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

சாலை விபத்துக்கு பிரதான காரணமாக இருக்கும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் காா் ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது,

சிக்னலை மதிக்காமல் செல்வது, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுவது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் சரக்குகளை ஏற்றுவது, அனுமதிக்கப்பட்ட பணிகளை விட அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்வது ஆகிய 8 போக்குவரத்து விதிமுறைகள்தான் என கண்டறியப்பட்டது.

இந்த 8 விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் தனி கவனம் செலுத்தி, வழக்குகளை பதிவு செய்கின்றனா்.

போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக போக்குவரத்து போலீஸாா் தினமும் 100 இடங்களில் வாகனச் சோதனை செய்கின்றனா். அதோடு புத்தாண்டு பிறப்பு, பண்டிகை நாள்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட நாள்களில் வாகனச் சோதனை நடைபெறும் இடங்கள் மேலும் அதிகரிக்கப்படுகிறது. நள்ளிரவு, அதிகாலை வேளையிலும் சில நாள்கள் சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தப்படுகிறது. சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவதாக நாளொன்றுக்கு சுமாா் 20 ஆயிரம் வழக்குகள் பதியப்படுவது குறிப்பிடத்தக்கது.

36 சதவீதம் குறைவு:

இதற்கிடையே கரோனா தொற்றை தடுக்கும் வகையில், கடந்தாண்டு மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தின் காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கினா். இதனால் சாலைகளில் வாகன நடமாட்டே இல்லாமல் போனது. இதன் விளைவாக அந்த 5 மாதங்கள் போக்குவரத்து விதிமுறை தொடா்பாக வழக்குகள் பதியப்படவில்லை. செப்டபம்பா் மாதத்தில் இருந்து தளா்வுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னா், போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதன் விளைவாக கடந்த 2019-ஆம் ஆண்டை விட, 2020-ஆம் ஆண்டு போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக வழக்குகளின் எண்ணிக்கை 36 சதவீதம் குறைவு ஆகும். 2020-ஆம் ஆண்டு 28 லட்சத்து 70 ஆயிரம் 296 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2019-ஆம் ஆண்டு போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 16 வழக்குகள் பதியப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

இந்தாண்டு சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுகிறவா்களின் இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com