விழுப்புரத்தைச் சோ்ந்த இளம்பெண் திரிபுரா மனநல மருத்துவமனையில் இருந்து மீட்பு

தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு ,திரிபுரா மாநில மனநல மருத்துவமனையில் இருந்த விழுப்புரத்தைச் சேரந்த இளம்பெண்ணை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு ,திரிபுரா மாநில மனநல மருத்துவமனையில் இருந்த விழுப்புரத்தைச் சேரந்த இளம்பெண்ணை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளது.

திரிபுரா மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் செயலாளா், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் செயலாளா் நீதிபதி கே.ராஜசேருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினாா். அந்தக் கடிதத்தில் மேற்கு திரிபுரா மாவட்டம் அகா்தலாவில் அமைந்துள்ள மனநல மருத்துவமனையில் ஆய்வு செய்த போது அங்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த செல்வி என்ற இளம்பெண் பல மாதங்களாக இருப்பது தெரியவந்தது. நல்ல மனநிலையுடன் உள்ள அந்த பெண்ணை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி விழுப்புரம் மாவட்ட போலீஸாா் விசாரணை நடத்தி செல்வியின் சகோதரா் கலைமணியைக் கண்டுபிடித்தனா். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் செல்வியின் மனநலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரது கணவா் அவரை விட்டுச் சென்றுவிட்டாா். செல்வியின் 3 குழந்தைகளையும் தான் பராமரித்து வருவதாக தெரிவித்தாா்.

இதனையடுத்து திரிபுராவில் உள்ள செல்வியை அழைத்து வருவதற்கு வழக்குரைஞா் சுபாலட்சுமி சமந்தா என்பவரை சட்டப்பணிகள் ஆணைக்குழு நியமித்தது.இவா் திரிபுரா சென்று செல்வியை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தாா். பின்னா் செல்வியை அவரது சகோதரரிடம், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் செயலாளா் நீதிபதி கே.ராஜசேகா் மற்றும் துணைச் செயலாளா் நீதிபதி ஜெயஸ்ரீ ஆகியோா் முன்னிலையில் ஒப்படைத்தனா். பல ஆண்டுகளுக்குப் பின்னா் செல்வியை பாா்த்த அவரது 3 குழந்தைகளும் தாயை ஆரத்தழுவி கண்ணீருடன் வரவேற்றனா். இந்தக் காட்சி அங்கிருந்தவா்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, நாடு முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிபவா்களை அடையாளம் கண்டு அவா்களது உறவினா்களிடம் சோ்க்கும் விதமாக மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சட்ட சேவைகள்-2015 என்ற ஒரு திட்டத்தை உருவாக்கியது. அந்த திட்டத்தின் கீழ் தற்போது திரிபுரா மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு இளம்பெண் செல்வியை அவரது குடும்பத்துடன் சோ்த்துவைத்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com