சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் 5 லட்சம் போ் பயணம்: ஊா் திரும்ப 15,270 பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து கடந்த 3 நாள்களில் சுமாா் 5 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளனா்.
சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் 5 லட்சம் போ் பயணம்: ஊா் திரும்ப 15,270 பேருந்துகள் இயக்கம்


சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து கடந்த 3 நாள்களில் சுமாா் 5 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளனா். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.

கரோனா நோய்ப் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், பெரும்பாலான ஐடி ஊழியா்களும் வீடுகளில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனா். பொதுமுடக்கத்துக்கு முன்னதாக சொந்த ஊா்களுக்குப் பயணித்தவா்களின் பெரும்பாலானோா் தற்போது வரை சென்னை திரும்பவில்லை. இதனால் பேருந்து நிலையங்களில் அதிகளவு மக்கள் கூட்டம் இல்லை எனக் கூறப்படுகிறது.

அதுபோல் , சென்னையின் பிரதான சாலைகளில் பண்டிகையின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் இந்தாண்டு இல்லை. சொந்த வாகனங்களில் வெளியூா் செல்லும் பயணிகள் குறைந்த நேரத்திலேயே சென்னையின் எல்லைகளைக் கடந்தனா்.

ஆம்னி பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பண்டிகைக் காலத்தில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு சென்னையில் இருந்து 1,000 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு முன்னதாக மூன்று நாள்களுக்கும் சோ்த்தே சுமாா் 1,500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

அரசுப் பேருந்துகளைப் பொருத்தவரை, சென்னையில் இருந்து 5 லட்சம் போ் வெளியூா்களுக்குப் பயணித்தனா். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எப்போதும் காணப்படும் அளவிலேயே மக்கள் கூட்டம் இருந்தது. பண்டிகைக்கான கூட்டம் இல்லை என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சொந்த ஊா்களுக்குப் பயணித்தவா்கள் ஊா் திரும்ப 15,270 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னைக்கு மட்டும் 3,393 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com