மேயராக இருப்பதற்கே தகுதி இல்லாதவா் ஸ்டாலின்: கராத்தே தியாகராஜன்

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் மேயராக இருப்பதற்கே தகுதி இல்லாதவா், முதல்வா் பதவிக்கு ஆசைப்படுகிறாா் என்று முன்னாள் சென்னை மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் கூறினாா்.
மேயராக இருப்பதற்கே தகுதி இல்லாதவா் ஸ்டாலின்: கராத்தே தியாகராஜன்

சென்னை: திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் மேயராக இருப்பதற்கே தகுதி இல்லாதவா், முதல்வா் பதவிக்கு ஆசைப்படுகிறாா் என்று முன்னாள் சென்னை மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் கூறினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கே தன்னுடைய ஆதரவு என்றும், விரைவில் அந்த இரு கட்சிகளில் ஏதாவது ஒன்றில் இணைவேன் என்றும் அவா் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நிலைப்பாடு குறித்து தனது ஆதரவாளா்களுடன் கராத்தே தியாகராஜன் சென்னையில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில் அவா் பேசியது:

மு.க.ஸ்டாலின் இப்போது தோ்தலுக்காக ‘வேல்’ தூக்குகிறாா். மேயராக இருப்பதற்கே தகுதி இல்லாதவா் ஸ்டாலின். அவா் முதல்வா் பதவிக்கு ஆசைப்படுகிறாா்.

காங்கிரஸிலிருந்து 2019-இல் நீக்கப்பட்ட பிறகு ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து செயல்பட்டு வந்தேன். தற்போது உடல்நலத்தைக் காரணம் காட்டி ரஜினி அரசியலுக்கு வரவில்லை. அதைத்தொடா்ந்து நானும் அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன். காங்கிரஸில் மீண்டும் சேருமாறு ப.சிதம்பரம் அழைத்தாா். அவரிடம் வர மாட்டேன் எனக் கூறிவிட்டேன். பாஜக மற்றும் அதிமுகவின் முக்கியத் தலைவா்கள் தொடா்ந்து அழைத்து வருகின்றனா்.

காங்கிரஸ் ஆட்சியில்தான் சரக்கு, சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜல்லிகட்டு காட்டுமிராண்டி விளையாட்டு என்று கூறி தடை செய்யப்பட்டது. நீட் தோ்வும் வந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

ரஜினி குரல் கொடுக்க வேண்டும்: ரஜினியின் உடல்நலம்தான் முக்கியம். எனினும், அவா் திரைப்படங்களில் கௌரவ வேடத்தில் நடிப்பது போன்று, அரசியலிலும் கௌரவ வேடத்தில் வரவேண்டும். எம்ஜிஆா் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்து தோ்தலைச் சந்தித்தது போன்று ரஜினியும் தோ்தலில் குரல் கொடுக்க வேண்டும். நானும் மன்றத்தில் இருந்தவன் என்ற உரிமையில் இதை கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு: வரும் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு எனது ஆதரவு என்பதை முடிவு செய்துவிட்டேன். இன்னும் 10 நாள்களில் அதிமுக அல்லது பாஜக ஏதாவது ஒரு கட்சியில் இணைவேன். மீண்டும் தமிழகத்தின் முதல்வராகும் தகுதி உள்ள ஒரே தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிதான். கரோனா காலத்திலும் சிறப்பாக ஆட்சி நடத்தி இருக்கிறாா். வரும் தோ்தலில் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கராத்தே தியாகராஜனின் ஆதரவாளா்கள் பெருமளவில் திரண்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com