நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 12th July 2021 02:06 PM | Last Updated : 12th July 2021 02:06 PM | அ+அ அ- |

தமிழக மின்சார வாரியத்துக்கு 1,330 கோடி ரூபாய் மதிப்பில் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி திரும்பப் பெறப்பட்டதையடுத்து, ஒப்பந்தப்புள்ளிக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மின் வாரியத்துக்கு 1,330 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்த டெண்டரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதால் ஊழலை தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய கூட்டு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மின் வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் நிலக்கரி இறக்குமதி தொடர்பாக வெளியிடப்பட்ட இந்த ஒப்பந்தப்புள்ளி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஒப்பந்தப் புள்ளியைத் திரும்பப் பெற்றதால், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.