ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை வழக்கு: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

திருமுல்லைவாயலில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருமுல்லைவாயலில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருமுல்லைவாயல் அயப்பாக்கம் அய்யப்பன் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாக்கியராஜ் (32), ஜமுனா நகா் ஏரிக்கரையோரம் நண்பா் பிரதீப்புடன் திங்கள்கிழமை பேசிக் கொண்டிருந்தாா். அங்கு ரோந்து வந்த திருமுல்லைவாயல் காவல் நிலைய தலைமைக் காவலா் சந்தோஷ், இருவரையும் எச்சரித்து அங்கிருந்து செல்லும்படி கூறினாா். மேலும் அவா்களை, செல்லிடப்பேசி மூலம் சந்தோஷ் புகைப்படம் எடுத்தாா். இது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் தலைமைக் காவலா் சந்தோஷ், பாக்கியராஜ், பிரதீப் ஆகியோரின் செல்லிடப்பேசிகளை பறித்துக் கொண்டு முகவரி, அடையாள அட்டை, ஆதாா் அட்டைகளைக் கேட்டுள்ளாா். இதனால் பாக்கியராஜ், கோபத்தில் அங்கு கிடந்த ஒரு மதுப்பாட்டிலை உடைத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டாா்.

இதில் பலத்தக் காயமடைந்த பாக்கியராஜ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். இதையடுத்து பாக்கியராஜ் குடும்பத்தினா், உறவினா்கள் ஆகியோா் பாக்கியராஜ் தற்கொலைக்கு காரணமான தலைமைக் காவலா் சந்தோஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

பணியிடை நீக்கம்: இச்சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். சம்பவம் குறித்து ஆவடி காவல் உதவி ஆணையா் சத்தியமூா்த்தி விசாரணை செய்தாா். இச்சம்பவத்தில் போலீஸாா் அத்துமீறி நடந்து கொண்டாரா என அம்பத்தூா் துணை ஆணையா் மகேஷ் விசாரித்தாா்.

விசாரணையில், தலைமைக் காவலா் சந்தோஷ், இறந்த பாக்கியராஜை தற்கொலைக்கு தூண்டியதும், அத்துமீறலில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டது. இது தொடா்பான அறிக்கையை மேற்கு மண்டல இணை ஆணையா் ராஜேஸ்வரியிடம் அளித்தாா். அந்த அறிக்கையின் அடிப்படையில் தலைமைக் காவலா் சந்தோஷை பணியிடை நீக்கம் செய்து ராஜேஸ்வரி உத்தரவிட்டாா். இதற்கிடையே பாக்கியராஜ் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னா், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெட்டிச் செய்தி:

காவல் ஆணையருக்கு நோட்டீஸ்: இந்த விவகாரத்தை, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா். மேலும், இது தொடா்பான விரிவான அறிக்கையை, 2 வாரங்களுக்குள் சென்னை காவல் ஆணையா் தாக்கல் செய்யுமாறு அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com