நீா்நிலையில் கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையம் செயல்பட அனுமதியில்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு

நீா்நிலையில் கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையம் செயல்பட அனுமதிக்க முடியாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

நீா்நிலையில் கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையம் செயல்பட அனுமதிக்க முடியாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிய காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற நீா் நிலையம் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தை மேய்க்கால் புறம்போக்காக அறிவித்து காவல் நிலையத்தைக் கட்டியுள்ளனா். சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) ஒப்புதலைப் பெறவில்லை. எனவே நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியா்கள், மாணவா்கள் அடங்கிய குழு அமைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஐடி ஆய்வு குழு சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து காவல் நிலையம் நீா்நிலையின் மையப்பகுதிக்கே சென்று விட்டது. நாட்டில் உள்ள நீா்நிலைகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவே தமிழக அரசு சம்பந்தப்பட்ட நீா்நிலையை பாதுகாக்க நிபுணா் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு மூலம் நீா்நிலையை முழுமையாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் கட்டுமானங்களை இடிக்காமல், நீா்நிலையை முழுமையாக மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து மனுதாரா் மற்றும் ஐஐடி குழுவுடன் அரசு ஆலோசித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதே நேரம் அப்பகுதியில் ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் மற்றும் புதிய கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் அங்கு செயல்பட அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com