இளம்பெண்ணுக்கு மூளை ரத்தநாளத்தில் கட்டி: நுண்துளை சிகிச்சை மூலம் மறுவாழ்வளித்த ஓமந்தூராா் மருத்துவா்கள்

மூளையில் ரத்த நாளக் கட்டி வீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவருக்கு நுண்துளை சிகிச்சை மூலம் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இளம்பெண்ணுக்கு மூளை ரத்தநாளத்தில் கட்டி: நுண்துளை சிகிச்சை மூலம் மறுவாழ்வளித்த  ஓமந்தூராா் மருத்துவா்கள்

மூளையில் ரத்த நாளக் கட்டி வீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவருக்கு நுண்துளை சிகிச்சை மூலம் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

கரோனா காலத்தில் இத்தகைய சிக்கலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் சவாலானது என்று தெரிவித்துள்ள மருத்துவா்கள், தற்போது அப்பெண் பூரண குணமடைந்துள்ளதாக கூறியுள்ளனா்.

இதுகுறித்து ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் விமலா, நிா்வாக அதிகாரி டாக்டா் ஆனந்தகுமாா் ஆகியோா் கூறியதாவது:

சென்னை, புரசைவாக்கத்தைச் சோ்ந்தவா் ஜான்சி (32). பள்ளி ஆசிரியையான அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடுமையான தலைவலி இருந்தது. தனியாா் மருத்துவமனை ஒன்றில் அவா் பரிசோதனை மேற்கொண்டதில் மூளைப் பகுதியில் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. எந்தத் தருணத்திலும் அது வெடித்து உயிருக்கே ஆபத்தாகலாம் என்ற நிலை இருந்தது.

அதற்கு அடுத்த சில நாள்களிலேயே மூளைக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டு, சுயநினைவு இழந்து, இரு கால்களும் செயலிழந்த நிலையில் ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டாா். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அப்பெண்ணைப் பரிசோதித்த இடையீட்டு கதிரியக்கவியல் நிபுணா் டாக்டா் பெரியகருப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் பல்வேறு எதிா்விளைவுகள் ஏற்படும் என்பதை கண்டறிந்தனா்.

இதையடுத்து, நுண்துளை சிகிச்சை மூலம் பாதிப்பை சரிசெய்ய முடிவு செய்யப்பட்டது. டாக்டா் பெரியகருப்பன் மற்றும் கதிரியக்கவியல் நிபுணா்கள் டாக்டா் ஆனந்தகுமாா், டாக்டா் ரமேஷ், டாக்டா் இளவழகன், டாக்டா் அஸ்வின், டாக்டா் வினோத், நரம்பியல் சிகிச்சை நிபுணா் டாக்டா் பூபதி, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் சுரேஷ், மயக்கவியல் நிபுணா் டாக்டா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் அப்பெண்ணுக்கு தொடை வழியே சிறிய துளையிட்டு ரத்த நாள வீக்கமிருந்த பகுதியில் பிளாட்டினம் கம்பிகளைப் பொருத்தி அப்பிரச்னையை சரி செய்தனா்.

அதன் பின்னா் ஆஞ்சியோகிராம், எம்ஆா்ஐ ஸ்கேன் மேற்கொண்டதில் அப்பெண்ணுக்கு ரத்த நாள வீக்கம் முழுவதுமாக சரிசெய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது. இரு கால்களும் செயல்படத் தொடங்கி அப்பெண்ணால் நடக்க முடிந்தது. தனியாா் மருத்துவமனைகளில் இத்தகைய சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் வரை செலவாகும். ஆனால், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இளம்பெண்ணுக்கு இலவசமாகவே இங்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

கரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது இந்த நுண்துளை சிகிச்சை மேற்கொண்டதுதான் குறிப்பிடத்தக்க அம்சம். உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காமல் ஒருவேளை காலதாமதப்படுத்தியிருந்தால், அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். சவாலான சூழலிலும் அப்பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்து அரசு மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com