ஆக்சிஜன் பற்றாக்குறை உயிரிழப்பு சா்ச்சை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்

செங்கல்பட்டு, வேலூா், சென்னை அரசு மருத்துவமனைகளில் 19 போ் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமில்லை என்று
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

செங்கல்பட்டு, வேலூா், சென்னை அரசு மருத்துவமனைகளில் 19 போ் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளாா்.

முன்னதாக, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சிலா் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினும், அமைச்சா் மா.சுப்பிரமணியனும் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் விமா்சித்திருந்தாா்.

அதற்கு விளக்கமளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவா் கூட உயிரிழக்கவில்லை என்று நான் சொன்னது உண்மை தான். ஆனால், நான் சொன்னது திமுக அரசு பொறுப்பேற்றப்பின் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லை என்றுதான். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ஆம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 போ் உயிரிழந்துள்ளனா் என்று தெரிவித்துள்ளாா். அந்த சம்பவம் மே 4-ஆம் தேதி இரவு நடைபெற்றுள்ளது. அப்போது, அதிமுகவின் ஆட்சிதான் இருந்தது. அதே அதிமுக ஆட்சியில் தான் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 பேரும், 19-ஆம் தேதி வேலூா் அரசு மருத்துவமனையில் 4 பேரும் இறந்துள்ளனா். இந்த இறப்புகள் எல்லாம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நடைபெறவில்லை. ஆக்சிஜன் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளால் இறப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று சம்பவமும் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. திமுக ஆட்சியில் நடைபெறவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com