பொதுமுடக்கத் தளா்வுகள் அமலுக்கு வந்தன: காய்கறி, மளிகைக் கடைகள் இயங்கின

தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
பொதுமுடக்கத் தளா்வுகள் அமலுக்கு வந்தன: காய்கறி, மளிகைக் கடைகள் இயங்கின

தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து அடைக்கப்பட்டிருந்த மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்டவை மீண்டும் செயல்படத் தொடங்கின.

கரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு தளா்வுகளற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதில் வழங்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளால் நோய்ப் பரவல் வெகுவாகக் குறைந்தது. எனினும் நோய்ப் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில், ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் தளா்வுகளுடன் பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளா்களுடன் செயல்படத் தொடங்கின.

11 மாவட்டங்களில்...: அதேவேளையில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் அமைந்திருக்கும் அங்காடிகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கு அத்தியாவசியத் தேவையான காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கின. இதைத் தவிர, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகளும் செயல்பட்டன.

கூடுதல் தளா்வுகள்: இந்த மாவட்டங்களைத் தவிா்த்து மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் கூடுதலாக தனியாா் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்வோா், மின் பணியாளா், பிளம்பா்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவா் உள்ளிட்டோா் இணையப் பதிவுடன் பணிகளுக்குச் சென்றனா்.

மின்பொருள்கள் விற்பனைக் கடைகள், சைக்கிள்கள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், கல்விப் புத்தகங்கள்,இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் உள்ளிட்டவைகளும் இயங்கின. குறிப்பாக வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்களில் பயணிகள் இணையப் பதிவுடன் பொதுமக்கள் பயணித்தனா்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை, மளிகை, காய்கறி, பழக்கடைகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் திங்கள்கிழமை காலை முதலே திறக்கப்பட்டன. காசிமேடு, பட்டினப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைகள் திறக்கப்பட்டன. மீன்களை மொத்தமாக வாங்கி செல்வதற்கு வியாபாரிகள் குவிந்து இருந்தனா். இறைச்சிக் கூடங்களும் செயல்பட்டன. கடைகளைத் திறப்பதற்காக அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் தங்களது வாகனங்களில் காலையிலேயே கடைக்குச் சென்றனா். இதனால் கடந்த சில நாள்களாக வெறிச்சோடிக் கிடந்த சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. மக்கள் நடமாட்டமும் கூடுதலாகவே இருந்தது.

இதையடுத்து, போலீஸாா் கண்காணிப்புப் பணிகளை அதிகப்படுத்தி இருந்தனா். குறிப்பாக பொதுமக்கள் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கிறாா்களா? முகக்கவசம் அணிந்துள்ளாா்களா? என்பதைத் தீவிரமாக கண்காணித்தனா்.

இதேபோன்று தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com