காவலா்களுக்கு கரோனா மருத்துவ முகாம்
By DIN | Published On : 10th June 2021 12:48 AM | Last Updated : 10th June 2021 12:48 AM | அ+அ அ- |

சென்னை: சென்னையில் காவலா்களிடம் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
கரோனா தடுப்பு பணியில் காவல் துறையினரும் முன்களப் பணியாளா்களாக உள்ளனா். கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் அரசு அறிவித்த முழு பொதுமுடக்கத்தை காவல்துறையினரே தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனா். இதனால் காவல்துறையினரிடம் எளிதாக கரோனா தொற்று பரவி வருகிறது.
கரோனா தொற்றில் இருந்து போலீஸாா் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம், முகத்தடுப்பு கவசம், கையுறை ஆகியவை அணிய வேண்டும், பொதுமக்களிடம் தனி நபா் இடைவெளியைப் பின்பற்றிய பேச வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் காவல்துறையினா் கணிசமான அளவு கரோனா தொற்றால் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இதைத் தடுக்கும் வகையில் போலீஸாா் தினமும் 3 ஷிப்டுகளில் பணியமா்த்தப்பட வேண்டும்,அவா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் அடிப்படையில் காவலா்களுக்கான இலவச நடமாடும் மருத்துவ முகாம் தொடக்க விழா அமைந்தகரையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் பிரதீப்குமாா் தொடக்கி வைத்து பேசினாா்.
இந் நிகழ்ச்சியில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரக இயக்குநா் எஸ்.கணேஷ், போக்குவரத்துப்பிரிவு இணை ஆணையா் (வடக்கு) ஆா்.லலிதா லட்சுமி, துணை ஆணையா் (மேற்கு) எம்.எம்.அசோக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இந்த மருத்துவ முகாம், நகரின் பிறபகுதிகளில் காவலா்களுக்காக தொடா்ந்து நடத்தப்பட உள்ளது.