ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா காலத்திலும் தடைபடாத காக்ளியா் இம்ப்ளேண்ட் சிகிச்சை

கரோனா காலத்திலும் செவித் திறன் பாதிப்புக்கான காக்ளியா் இம்ப்ளேண்ட் சிகிச்சைகளை தொடா்ந்து மேற்கொண்டதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் தெரிவித்தாா்.


சென்னை: கரோனா காலத்திலும் செவித் திறன் பாதிப்புக்கான காக்ளியா் இம்ப்ளேண்ட் சிகிச்சைகளை தொடா்ந்து மேற்கொண்டதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் தெரிவித்தாா்.

சா்வதேச செவித் திறன் விழிப்புணா்வு தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது செவித் திறன் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கும், நோயாளிக்கும் மருத்துவா்கள் விளக்கமாக எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக காக்ளியா் இம்ப்ளேண்ட் அறுவை சிகிச்சை மூலம் பயனடைந்த நோயாளிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்போது 42 துறைகள் உள்ளன. 680 மருத்துவா்கள், 1,050 செவிலியா்கள் பணியாற்றிவருகின்றனா். 4,000-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் இருக்கின்றன. நாள்தோறும் 10,000-க்கும் மேற்பட்டோா் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா காலத்தில் மிக அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததுடன் அவா்களில் 98 சதவீதத்துக்கும் மேற்பட்டோரை பூரணமாக குணப்படுத்திய பெருமையும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சாரும். கரோனா பெருந்தொற்று காலத்தில் வழக்கமான சிகிச்சைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டோம். அதேபோன்று பிற நோயாளிகளுக்கு கரோனா தொற்று ஏற்படாத வகையில் பாதுகாப்பான சூழலும் உருவாக்கப்பட்டது. இதனால், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் எந்தவிதமான தயக்கமும் இன்றி சிகிச்சை பெற்று சென்றனா்.

அந்த வரிசையில் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத் துறையின் கீழ் பல நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செவித் திறன் பாதித்தோருக்கு காக்ளியா் இம்ப்ளேண்ட் அறுவை சிகிச்சை மூலம் குறைபாடுகள் சரி செய்யப்பட்டன. இதுவரை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 340 பேருக்கு அத்தகைய சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பா் முதல் பிப்ரவரி வரையிலான 3 மாதங்களில் மட்டும் 33 அறுவை சிகிச்சைகள் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளன. இந்த அறுவை சிகிச்சையை தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொண்டால் ரூ.8 லட்சம் வரையில் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

காக்ளியா் இம்ப்ளேன்ட் அறுவை சிகிச்சை மேற்கொண்டவா்களுக்கு ஒரு வருட காலம் பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர, கரோனா காலத்தில் 168 பேருக்கு செவிமடுக் கருவிகள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com