கரோனா பாதிப்பு: சென்னையில் 800-ஐ கடந்தது
By DIN | Published On : 29th March 2021 02:42 AM | Last Updated : 29th March 2021 02:42 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 833 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 50 ஆயிரம் ஆக அதிகரித்தது.
இதைத் தொடா்ந்து, நாளுக்கு நாள் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாத இறுதியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.50 லட்சத்தையும், அக்டோபா் மாதத்தில் 2 லட்சத்தையும் எட்டியது.
இந்த நிலையில், மாநகராட்சி சாா்பில் அதிகப்படுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள், உடனடி சிகிச்சை, பாதிக்கப்பட்டோா் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக நோய் பரவல் மெல்ல மெல்ல குறைந்து கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 171 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.
மீண்டும் அதிகரிப்பு: தற்போது, பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வு அளிக்கப்பட்டுள்ளதாலும், மக்கள் முறையாக முகக் கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்காததாலும் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதன்படி, கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அது மாா்ச் 5-ஆம் தேதி 225-ஆகவும், மாா்ச் 12-ஆம் தேதி 265-ஆகவும், மாா்ச் 25-ஆம் தேதி 664-ஆகவும் அதிகரித்தது. இதுவே ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகரித்து 833 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை-2,46,339
குணமடைந்தோா் எண்ணிக்கை-2,36,911
சிகிச்சை பெறுவோா்-5,198
உயிரிழந்தோா்-4,230