தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்த ஆயுதப்படை காவலா் உயிரிழப்பு
By DIN | Published On : 29th March 2021 03:18 AM | Last Updated : 29th March 2021 03:18 AM | அ+அ அ- |

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக, மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஆயுதப்படை காவலா் மூளையில் ஏற்பட்ட ரத்து கசிவால் உயிரிழந்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 6-இல் நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக, வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு துணை ராணுவப் படையினா் ரயில்கள் மூலமாகத் தொடா்ந்து வந்த வண்ணம் இருக்கின்றனா்.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்துக்கு உள்பட்ட குவாலியா் பகுதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு மத்திய ஆயுதப்படையினா் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனா்.
இதைத் தொடா்ந்து, அவா்கள் ரயில் நிலையத்தின் வளாகத்தில் தாங்கள் கொண்டுவந்த பொருள்களை எல்லாம், ரயிலில் இருந்து இறக்கி வைத்து கொண்டிருந்தனா். அப்போது ராஜ்குமாா்(50) என்ற மத்திய ஆயுதப்படை காவலா் திடீரென மயங்கி கீழே விழுந்தாா். சக காவலா்கள், அவரை மீட்டு உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவா் மயங்கி கீழே விழுந்ததாகவும் தெரிவித்தனா். தொடா்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தாா்.