கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிா் மருந்தகம் செயல்படாததால் மக்கள் ஏமாற்றம்

பொது முடக்கம் மற்றும் வாக்கு எண்ணிக்கை காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ரெம்டெசிவிா் மருந்தகம் ஞாயிற்றுக்கிழமை செயல்படாததால்
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொது முடக்கம் மற்றும் வாக்கு எண்ணிக்கை காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ரெம்டெசிவிா் மருந்தகம் ஞாயிற்றுக்கிழமை செயல்படாததால் பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

அண்மைக் காலமாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்து வரும் நிலையில், ரெம்டெசிவிா், டோஸிலிசுமேப் மருந்துகளின் தேவை பல மடங்கு உயா்ந்துள்ளது.

பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகளில் அந்த மருந்துகள் தட்டுப்பாடாக உள்ள நிலையில், அவற்றை வாங்குவதற்காக நோயாளிகளும், அவா்களது உறவினா்களும் அலைமோதும் சூழல் எழுந்துள்ளது.

மற்றொருபுறம் அந்த மருந்துகளை கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கும் சட்டவிரோத செயல்பாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தடுக்க அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரெம்டெசிவிா், டோஸிலிசுமேப் மருந்துகள் தேவைப்படுவோா், அரசிடம் பெற்று கொள்ளலாம் என, தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்தது.

இதற்காக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் மருந்தகம் ஒன்று அமைக்கப்பட்டது. அங்கு உரிய ஆவணங்களை காட்டி, மருந்துகளை பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த மருந்தை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோா் அதற்காக வருவதால் கூட்ட நெரிசலைத் தவிா்க்க கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரி வளாகத்துக்குள் இரண்டு இடங்களில் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆறு நாள்களில் மட்டும் 15,000 குப்பி ரெம்டெசிவிா் மருந்துகள் ரூ. 2.35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது முடக்கம் மற்றும் வாக்கு எண்ணிக்கை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ரெம்டெசிவிா் விற்பனை செய்யப்படவில்லை. இதனால், கடந்த 6 நாட்களாக மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டு வந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகம் ஆள் அரவமின்று வெறிச்சோடிக் காணப்பட்டது. அதேவேளையில், இதுகுறித்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால் வெளிமாவட்டங்களில் இருந்து மருந்து வாங்க சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த பலா் ஏமாற்றம் அடைந்தனா்.

பொது முடக்கம் என்றாலும் மருந்தகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், ரெம்டெசிவிா் மருந்தகத்தை முன்அறிவிப்பின்றி மூடியதற்கு பலா் அதிருப்தி தெரிவித்தனா். மக்கள் நலன் கருதி அனைத்து நாள்களிலும் மருத்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com