புகார் மீது நடவடிக்கை இல்லை: காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

சோளப் பயிரைச் சேதப்படுத்தியவர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


சென்னை: சோளப் பயிரைச் சேதப்படுத்தியவர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
 விழுப்புரம் மாவட்டம் கருந்தாலக்குறிச்சியைச் சேர்ந்த எஸ்.ராமசாமி என்பவர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: எனக்குச் சொந்தமாக சித்தேரி கிராமத்தில் 1.25 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம் தொடர்பாக பாண்டியன் என்பவருக்கும் எனக்கும் பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு, எனது இடத்துக்குள் டிராக்டரை ஓட்டிக் கொண்டு அத்துமீறி நுழைந்த பாண்டியன், அங்கு பயிரிடப்பட்டிருந்த ரூ.2.5 லட்சம் மதிப்பிலான சோளத்தை சேதப்படுத்தினார். இதுகுறித்து சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் மறுநாளே புகாரளித்தும், அங்கிருந்த உதவி ஆய்வாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு குற்ற வழக்குப் பதியாமல் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரனின் உத்தரவு: மனுதாரருக்கு ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு வழங்கிவிட்டு, அதனை உதவி ஆய்வாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்.  மேலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்கும்போது அதன் மீது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்குமாறு தமிழ்நாடு டிஜிபிக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com