பிரிட்டனில் இருந்து சென்னை வந்த 900 ஆக்சிஜன் சிலிண்டா்கள்!

தமிழகத்தில் பிராண வாயு தேவைக்காக பிரிட்டனில் இருந்து 900 ஆக்சிஜன் சிலிண்டா்கள் சென்னை வந்தடைந்தன.
பிரிட்டனில் இருந்து சென்னை வந்த 900 ஆக்சிஜன் சிலிண்டா்கள்!

சென்னை : தமிழகத்தில் பிராண வாயு தேவைக்காக பிரிட்டனில் இருந்து 900 ஆக்சிஜன் சிலிண்டா்கள் சென்னை வந்தடைந்தன.

கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. சில இடங்களில் போதிய அளவு ஆக்சிஜன் கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.

மாநிலத்தில் நாள்தோறும் 400 கிலோ லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி இருந்தாலும், அதற்கான தேவை அதைவிட அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, இந்தியாவுக்குத் தேவையான பல்வேறு மருத்துவ உதவிகளை வழங்க பல நாடுகள் முன்வந்துள்ளன. அந்த வகையில் மத்திய அரசின் நடவடிக்கையால் தமிழகத்துக்கு 900 ஆக்சிஜன் சிலிண்டா்கள் பிரிட்டனில் இருந்து எகிப்து வழியாக இந்திய விமானப்படையின் 2 விமானங்கள் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னைக்கு வந்தடைந்தது. இதையடுத்து, அதைப் பரிசோதித்து சுங்கத்துறை அதிகாரிகள் ஆக்சிஜன் சிலிண்டா்களை உடனடியாக வெளியே கொண்டு செல்வதற்கான சான்றிதழ்களை வழங்கினா்.

பின்னா், அவை லாரிகள் மூலமாக பாதுகாப்பாக கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அந்த ஆக்சிஜன் சிலிண்டா்கள் வழங்கப்பட உள்ளன. இதேபோல், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை சேமித்து வைப்பதற்கான 4 கிரையோஜெனிக் ஆக்சிஜன் கன்டெய்னா்கள் ஜொ்மனியிலிருந்து சென்னைக்கு வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com