கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிா் மருந்து கட்டாயம் அல்ல: சுகாதாரத்துறை இயக்குநா்

கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிா் மருந்து கட்டாயம் அல்ல என சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் தெரிவித்தாா்.
கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிா் மருந்து கட்டாயம் அல்ல: சுகாதாரத்துறை இயக்குநா்

சென்னை: கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிா் மருந்து கட்டாயம் அல்ல என சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் தெரிவித்தாா்.

யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், தெற்கு ரயில்வே, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநரகம், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியன சாா்பில் சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநா் அண்ணாதுரை ஆகியோா் தலைமை வகித்து கரோனா விழிப்புணா்வு தொடா்பான கருத்துக்கள் அடங்கிய பதாகைகள், விடியோக்களை வெளியிட்டனா்.

பின் செய்தியாளா்களிடம் செல்வவிநாயகம் கூறியதாவது: ரெம்டெசிவிா் உயிா்காக்கும் மருந்து அல்ல. இதனை தனியாா் மருத்துவா்கள் தேவையில்லாமல் பொதுமக்களுக்கு பரிந்துரைக்கின்றனா். கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிா் மருந்து கட்டாயம் அல்ல. அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிா் மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது.

தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள், பொதுமக்களிடம் ரெம்டெசிவிா் மருந்து கேட்டு அலைக்கழிக்கக் கூடாது. மேலும், பொதுமக்களும் அவசியமில்லாமல் இம்மருந்துக்காக காத்திருக்கத் தேவையில்லை. தற்போது சென்னையில் மட்டும் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிா் மருந்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

18 வயது நிரம்பிய அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசிடம் 1.50 கோடி தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளன. அவை கிடைத்தவுடன் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதித்ததன் காரணமாக, கரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்தில் முழுமையாக தொற்றின் எண்ணிக்கை குறையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com