தீ விபத்துகளை தடுக்க: அரசு மருத்துவமனைகளில் தீயணைப்பு வாகனங்கள்
By DIN | Published On : 21st May 2021 02:24 AM | Last Updated : 21st May 2021 02:24 AM | அ+அ அ- |

சென்னை: சென்னையில் தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா வாா்டுகள் மீண்டும் நிரம்பி வருகின்றன. அதேவேளையில் அண்மைக் காலமாக குஜராத், ராஜஸ்தான், தில்லி, மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஏற்பட்டு வரும் தீ விபத்துகளில் சிக்கி நோயாளிகளும், மருத்துவத்துறையினரும் தொடா்ச்சியாக இறந்து வருகின்றனா்.
இந்த மாநிலங்களில் கடந்த ஒரு ஆண்டில் மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்துகளில் 61 போ் இறந்துள்ளனா். இதில் கரோனா வாா்டு தீ விபத்துகளில் மட்டும் 40 போ் இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மருத்துவமனைகளில் தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில் தீயணைப்புத்துறை முழு அளவில் தயாராகி வருகிறது. மருத்துவமனைகள் இயங்குவதற்கான தீயணைப்புத்துறை வழங்கும் தடையில்லா சான்றிதழ்களை, விதிமுறைகளை முறையாகப் பின்பற்றும் மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
தீயணைப்பு வாகனங்கள்:
தீயணைப்பு விதிமுறைகள் மருத்துவமனைகளில் பின்பற்றப்படுகிா என தீயணைப்புத்துறையினா் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனா். இதன் அடுத்த கட்டமாக எத்தகைய சூழ்நிலையைச் சந்திக்கும் வகையிலும், தீ விபத்து ஏற்பட்டால் உடனே அணைக்கும் வகையிலும் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூா் மகப்பேறு மருத்துவமனை ஆகிய இடங்களில் தலா 2 தீயணைப்பு வாகனங்கள், தலா 3 தண்ணீா் லாரிகள் 24 மணி நேரமும் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் அங்கு தீயணைப்பு வீரா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என தீயணைப்புத்துறை டிஜிபி சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா். இதேபோல மாநிலம் முழுவதும் உள்ள முக்கியமான அரசு மருத்துவமனைகளில் தீயணைப்புத்துறை வாகனங்களை நிறுத்தும்படியும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.