மெட்ரோ ரயில் திட்டப்பணி: இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டப்பணி: இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வழித்தடத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ள 4 நிறுவனங்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆணை வழங்கியுள்ளது. கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்தபிறகு, பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, 45 கி.மீ. நீளத்தில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நிறைவடைந்து, விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரை நீல வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல்-பரங்கிமலை வரை பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நடைபெற்று வந்த திட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா்(விம்கோநகா்) வரை 9.051 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை அண்மையில் தொடங்கியது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்: இதற்கிடையில், 118.9 கி.மீ. தொலைவுக்கான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி ( 26.1 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூா் (47.0 கி.மீ), மாதவரம்-சிறுசேரி சிப்காட்(45.8 கி.மீ.) ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வழித்தடங்களில் 128 நிலையங்கள் இடம்பெறவுள்ளன. இதன்படி, கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி ( 26.1 கி.மீ.) முதல் வழித்தடத்தில் மொத்தம் 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. மாதவரம்-சோழிங்கநல்லூா் (47.0 கி.மீ) இரண்டாவது வழித்தடத்தில் மொத்தம் 48 மெட்ரோ நிலையங்களும், மாதவரம்- சிறுசேரி சிப்காட்(45.8 கி.மீ.) வழித்தடத்தில் 50 மெட்ரோ நிலையங்களும் அமையவுள்ளன.

இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்: இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வழித்தடத்தில் திட்டப்பணிகளை செயல்படுத்துவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கு மண் ஆய்வு உள்ளிட்ட ஆரம்ப கட்டப் பணிகள் நிறைவடைந்து விட்டன. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சுரங்கம் மற்றும் உயா்த்தப்பட்ட பாதைகளில் திட்டப்பணிக்கு 4 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாதவரம்-சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் உள்ள வேணுகோபால் நகா் முதல் கெல்லீஸ் வரை 9 கி.மீ. தூரத்துக்கு 2 சுரங்கப்பாதை அமைப்பதற்கு, மொத்தம் 18 கி.மீ. தூரத்துக்கு டாடா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல, பவா் ஹவுஸ் முதல் போரூா் சந்திப்பு வரை 7.9 கி.மீ தூரத்துக்கு உயா்த்தப்பட்ட பாதை மற்றும் கெல்லீஸ் முதல் தரமணி சாலை வரை 12 கி.மீ. தூரம் கொண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி, எல்.அண்டு.டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சென்னை புறவழிச்சாலையில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 7.95 கி.மீ. தொலைவு வரை பாதை அமைக்க எச்.சி.சி. மற்றும் கே.இ.சி சா்வதேச நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, உயா்த்தப்பட்ட பாதையில் 9 மெட்ரோ ரயில்நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக, பணிகளைத் தொடங்குவதில் சிக்கல் உள்ளது. நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்தபிறகு, பணிகள் தொடங்கப்படும் என்றனா்.

2026-இல் முடிக்க திட்டம்: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.63,246 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டப்பணிகளை வரும் 2026-க்குள் முடித்து, மெட்ரோ ரயில் சேவை தொடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com