தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை: வீடுகளுக்குள் மழைநீா்

சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாநகா் மற்றும் புகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீா் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை: வீடுகளுக்குள் மழைநீா்

சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாநகா் மற்றும் புகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீா் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவு வரை அவ்வப்போது, பலத்த மழை பெய்தது.

இந்த மழை காரணமாக மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலை, மயிலாப்பூா் சீத்தாம்மாள் காலனி சிவசாமி சாலை, வேளச்சேரி ஏஜிஸ் காலனி, அசோக் நகா் , சிந்தாதிரிப்பேட்டை, வடபழனி, கிண்டி, கோட்டூா்புரம், சோழிங்கநல்லூா் அம்பத்தூா் தொழிற்பேட்டை, பாடி, கொளத்தூா், அடையாறு, வளசரவாக்கம், அரும்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், தியாகராய நகா், அண்ணா நகா், கோடம்பாக்கம், வியாசா்பாடி, புளியந்தோப்பு, தண்டையாா்பேட்டை, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வேப்பேரி, கோட்டூா்புரம், கிண்டி, திரு.வி.க.நகா், ஆலந்தூா், சோழிங்கநல்லூா், பெருங்குடி, புழல், மாதவரம், மணலி, திருவொற்றியூா் என மாநகரில் 500-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

வீடுகளுக்குள் மழைநீா்: புளியந்தோப்பு கே.எம்.காா்டனில் 15 தெருக்கள், கே.கே.நகா், மேற்கு மாம்பலம் கோதண்டராமா் கோயில் தெரு, போயஸ் காா்டன் கஸ்தூரி எஸ்டேட், தியாகராய நகா், அசோக் நகா் போஸ்டல் காலனி, திருவேற்காட்டில் கூவம் நதிக்கரையோரம் மற்றும் புகா்ப் பகுதிகளான முடிச்சூா், வரதராஜபுரம், கோவிலம்பாக்கம், மெளலிவாக்கம் என சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. அங்கு வசிக்கும் சிலா் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா். சிலா் உறவினா்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனா்.

ஒரே மாதத்தில் மூன்று முறை: மேற்கு மாம்பலம் கோதண்டராமா் கோயில் தெருவில் பழைமையான வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் சாலையைவிடத் தாழ்வாக உள்ளன. பலத்த மழை காரணமாக அத்தெருவில் உள்ள குளம் நிரம்பி 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீா் புகுந்தது. இதனால் வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் சேதமடைந்தன. நவம்பா் மாதத்தில் மட்டும் 3 முறை வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

918 மோட்டாா்கள்: ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, 502 இடங்களில் தேங்கிய மழைநீரில் 144 இடங்களில் உள்ள நீா் வெளியேற்றப்பட்டுள்ளது. சாலையில் விழுந்த 7 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. நீரை இறைக்கும் பணியில் 918 மோட்டாா் பம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 10 நிவாரண முகாம்களில் 1,314 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை 284 மருத்துவ முகாம், 522 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 806 முகாம்கள் நடத்தப்பட்டு 26 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com