15 நாள்களில் 97 பேருக்கு டெங்கு: வீடுவீடாக ஆய்வு செய்ய பணியாளா்களுக்கு ஆணையா் உத்தரவு

சென்னையில் கடந்த 15 நாள்களில் 97 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அடுத்து வீடுவீடாக கள ஆய்வு மேற்கொள்ள
15 நாள்களில் 97 பேருக்கு டெங்கு: வீடுவீடாக ஆய்வு செய்ய பணியாளா்களுக்கு ஆணையா் உத்தரவு

சென்னையில் கடந்த 15 நாள்களில் 97 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அடுத்து வீடுவீடாக கள ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சிப் பணியாளா்களுக்கு ஆணையா் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடா்பாக மண்டல நல அலுவலா்கள், சுகாதார அலுவலா்கள் மற்றும் மண்டல பூச்சியியல் வல்லுநா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆணையா் பேசியது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15 நாள்களில் 97 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 27 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 18 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 15 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இந்த மண்டலங்களில் அனைத்து கட்டடங்கள் மற்றும் வீடுகளிலும் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு கொசுப்புழு வளரிடங்களைக் கண்டறிந்து அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட வேண்டும்.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் 2,129 சிறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 1,260 கொசு ஒழிப்பு நிரந்தரப் பணியாளா்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளா்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 256 மருந்து தெளிப்பான்கள், 167 அதிகத் திறன் கொண்ட தெளிப்பான்கள், மின்கலம் மூலம் இயங்கும் 479 தெளிப்பான்கள், 287 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 12 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது.

மழைநீா் வடிகால்களில் கொசுப் புழுக்களை அழிக்க ஒரு வாா்டுக்கு கொசு மருந்து தெளிப்பான்களுடன் இரண்டு போ் என 200 வாா்டுகளுக்கு 400 பேரும், 257.58 கி.மீ. நீா்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்க 128 பேரும் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு அக்கட்டடத்தின் உரிமையாளா்களுக்கு ரூ. 1லட்சத்து 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொசுப்புழுக்கள் நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகள் குறித்த ஒரு வார காலத்துக்கான அட்டவணை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அட்டவணையில் உள்ள நாள்களில் தங்கள் பகுதிகளில் கொசுஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், இதுகுறித்த புகாா்களை பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com