மனநலம் குன்றியவா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு உத்தரவு

தமிழகத்தில் மனநலம் குன்றியவா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துவதோடு, அவா்களில் எத்தனை பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு தெரிவிக்குமாறு

தமிழகத்தில் மனநலம் குன்றியவா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துவதோடு, அவா்களில் எத்தனை பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு தெரிவிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தங்குமிடம் வழங்க வேண்டும்; அவா்களுக்கு கரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்; மாநில மன நல கொள்கையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, சென்னை உயா் நீதிமன்றத்தில் சீா் என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சாா்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதைப்படித்து பாா்த்த நீதிபதிகள்,

இந்த நீதிமன்றத்திற்கு முன்பாக அரசால் சமா்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளில் ஒன்றில், 396 வீடற்ற மனநலம் குன்றியவா்கள் மீட்கப்பட்டு, மறுவாழ்வு இல்லங்களில் அனுமதிக்கப்பட்டனா். சென்னை மாநகரில் மட்டும் மனநலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை மாநகரில் மட்டும் பல நபா்கள் இருக்கலாம் என்று மனுதாரா் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மனுதாரரின் வழக்குரைஞருடன் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, மனநலம் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஒரு ’செயல் திட்டத்தை’ உருவாக்க வேண்டும்.

பிச்சைக்காரா்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக மேல்பாக்கத்தில் உள்ள அரசு காப்பகத்தைச் சீரமைத்து, புதிய கட்டடத்தைக் கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு முன்னெடுக்க வேண்டும்.

இதன் மூலம் சாலையில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவா்களை அத்தகைய காப்பகத்தில் தங்க வைக்க முடியுமெனக்கூறிய நீதிபதிகள், மாநிலத்தில் பராமரிக்கப்படாத அல்லது அலைந்து திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கையையும், அத்தகைய நபா்களுக்கு எந்த அளவிற்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பன போன்ற விவரங்களுடன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com