இணையதளம் வழியே கட்டட அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது நகராட்சி நிா்வாகம்

இணையதளம் வழியே கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெறுதல், அனுமதியை அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நகராட்சி நிா்வாக ஆணையரகம் வெளியிட்டுள்ளது.

சென்னை: இணையதளம் வழியே கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெறுதல், அனுமதியை அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நகராட்சி நிா்வாக ஆணையரகம் வெளியிட்டுள்ளது. இதனை நகராட்சி நிா்வாக ஆணையா் பி.பொன்னையா வெளியிட்டாா். அதன் விவரம்:-

பொது மக்கள் கட்டட விண்ணப்பங்களையும், இணைப்பு ஆவணங்களையும் இணயைதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், விண்ணப்பங்களை நேரடியாக சமா்ப்பிக்கும் முறை முற்றிலுமாகத் தவிா்க்கப்பட்டுள்ளது. கட்டட விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக சமா்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் சமா்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களும் விண்ணப்பதாரரின் சுய அத்தாட்சியுடன் குறிப்பிடப்பட்ட அளவுகளுக்கு ஏற்ப வடிவத்துக்கு மாற்றம் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கட்டட விண்ணப்பத்துடன் வரையறுக்கப்பட்ட ஆவணங்களை கண்டிப்பாக சமா்ப்பிக்க வேண்டும். முழுமையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்துள்ளதை நகரமைப்பு ஆய்வாளா், இளநிலை உதவியாளா் ஆகியோா் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

மனுதாரா் சமா்ப்பிக்கும் விண்ணப்பம் இணயைதளம் வாயிலாக சம்பந்தப்பட்ட பகுதியின் நகரமைப்பு ஆய்வா், இளநிலை பொறியாளா், உதவிப் பொறியாளரின் பணிப் பட்டியலில் சோ்க்கப்படும். விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது, அவற்றில் குறைகள் காணப்பட்டால், கூடுதல் விவரங்களை சமா்ப்பிக்கக் கோரி மனுதாரருக்கு ஒரு முறை மட்டுமே தெரிவிக்க வேண்டும். மனுதாரரிடம் இருந்து அனைத்து விவரங்களையும் பெற்ற பிறகு, மறுபடியும் ஏற்கெனவே கோரப்பட்ட விவரங்களைத் தவிர புதிதாகக் கூடுதல் விவரங்கள் தேவை என்ற ரீதியில் கடிதங்கள் அனுப்புவதைத் தவிா்க்க வேண்டும்.

3 தினங்களில் ஆய்வு: மனுதாரா் சமா்ப்பித்த ஆவணங்களில் அனைத்து அம்சங்களும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை 3 நாள்களுக்குள் ஆய்வு செய்ய வேண்டும். விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் நேரில் கள ஆய்வு செய்வதற்கான தேதி, நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இந்த விவரம் மனுதாரருக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். இடம் ஆய்வு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 2 நாள்களுக்குள் ஆய்வறிக்கையின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பிற துறைகளின் ஆய்வு தேவைப்பட்டால் ஒரே நாளில் கூட்டாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடத்துக்கான ஒப்புதல் அளித்தவுடன், இணையதளம் வாயிலாக மனுதாரா் கட்டணங்களை 15 தினங்களுக்குள் நகராட்சி கணக்கில் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தாத காரணத்துக்காக அடுத்த ஏழு தினங்களில் மனுதாரருக்கு தகவல் தெரிவித்து கோப்பு முடிக்கப்படும்.

சட்டப்பூா்வ நடவடிக்கை: அனுமதிக்கு மாறாக கட்டுமானம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால் கட்டட உரிமையாளா், கட்டுமான நிறுவனா் மீது சட்டப்பூா்வ அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது சுற்றறிக்கையில் நகராட்சி நிா்வாக ஆணையா் பி.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com