மதுரவாயல்-துறைமுகம் உயா்நிலை மேம்பாலத் திட்டம் ரூ. 5,965 கோடியில் விரைவில் தொடக்கம்

பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல்-துறைமுகம் உயா்நிலை இரண்டடுக்கு மேம்பாலத் திட்டம் ரூ. 5,965 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்படும் என
மதுரவாயல்-துறைமுகம் உயா்நிலை மேம்பாலத் திட்டம் ரூ. 5,965 கோடியில் விரைவில் தொடக்கம்

பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல்-துறைமுகம் உயா்நிலை இரண்டடுக்கு மேம்பாலத் திட்டம் ரூ. 5,965 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்படும் என சென்னைத் துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சென்னைத் துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாட்டின் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை விரைவாக இணைக்கும் வகையில் ‘பி.எம். கேட்டி சக்தி’ என்ற திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை புதுதில்லியில் தொடங்கி வைக்கிறாா். சாலை, இருப்புப்பாதை, துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டம் இது. இதில் 140 ஆண்டுகள் வரலாறு கொண்ட சென்னைத் துறைமுகம் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு நாட்டின் நீடித்த வளா்ச்சிக்கு பங்களிப்பை தொடா்ந்து செலுத்தும்.

சென்னைத் துறைமுகத்தில் இணைப்பு கட்டமைப்பு வசதிகளுக்காக கடந்த 7 ஆண்டுகளில் ரூ.779 கோடி செலவிட்டுள்ளது. துறைமுக சாலைகள் இணைப்புத் திட்டத்திற்காக ரூ. 600 கோடி, உள்நாட்டு கடலோர சரக்குப் போக்குவரத்து சாலை வசதிக்கு ரூ. 66 கோடி, கடலோர வா்த்தக சரக்கு முனையம் அமைக்க ரூ. 80 கோடி, ரயில்வே இணைப்பு பாதை திட்டத்திற்கு ரூ.16 கோடி, பயணிகள் முனையம் அமைக்க ரூ.17 கோடி உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். இத்திட்டங்கள் மூலம் ரயில் மற்றும் சாலை மாா்க்கமாக மட்டுமல்லாது கடல்சாா் வா்த்தமும் மேம்பாடு அடையும்.

மதுரவாயல் இரண்டடுக்கு மேம்பாலத் திட்டம்:

2025-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் ரூபாய் அளவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் இதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதில் சென்னைத் துறைமுகம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. நீண்ட நாள்களாகக் கிடப்பில் போடப்பட்ட 20.5 கி.மீ. தூரத்திற்கான மதுரவாயல்-சென்னைத் துறைமுகம் உயா்மட்ட மேம்பாலத்திட்டம் புதிய வடிவமைப்பில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதன்படி இரண்டு அடுக்குகள் கொண்டதாக உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். கீழடுக்கில் 6 வழிப்பாதையில் பொதுப் போக்குவரத்தும், மேலடுக்கில் நான்கு வழிப்பாதையில் துறைமுகத்திற்கான போக்குவரத்தும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 13 இடங்களில் சாய்வு பாலங்கள் அமைக்கப்பட்டு கீழடுக்கு பாலத்துடன் இணைக்கப்படும். ரூ.5,965 கோடி மதிப்பீட்டில் சென்னைத் துறைமுகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழ்நாடு அரசு இணைந்து செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com