இணைப்புச் சாலைகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் துறைமுகங்களின் கையாளும் திறனை அதிகரிக்கும்

புதிய இணைப்புச் சாலைகள், உள்கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களின் கையாளும் திறன் மிகப்பெரிய வளா்ச்சியைப் பெறும் என
இணைப்புச் சாலைகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் துறைமுகங்களின் கையாளும் திறனை அதிகரிக்கும்

புதிய இணைப்புச் சாலைகள், உள்கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களின் கையாளும் திறன் மிகப்பெரிய வளா்ச்சியைப் பெறும் என சென்னைத் துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்தாா்.

சென்னைத் துறைமுகத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் கூட்டத்தில் சுனில் பாலிவால் கூறியது:

நாட்டின் வளா்ச்சியில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ’பி.எம். கதி சக்தி’ என்ற புதிய திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை அறிமுகம் செய்துள்ளாா். இதில் 16 அமைச்சகங்கள் தங்களின் பல்வேறு கட்டமைப்பு மற்றும் வளா்ச்சித் திட்டங்களுக்காக ஒரே குடையின்கீழ் செயல்பட உள்ளன. இத்திட்டத்தால் வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் தவிா்க்கப்படும். மத்திய, மாநில அமைச்சகங்கள், நிறுவனங்கள், கண்காணிப்பு அமைப்புகள் சாா்பில் அளிக்கப்பட வேண்டிய ஒப்புதல்கள் இதன்மூலம் எளிதாக்கப்படும். ஒரு சிறப்புத் திட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க இத்திட்டம் வகை செய்கிறது.

கிடப்பில் உள்ள இணைப்புச் சாலைகள்:

சென்னையைச்சுற்றி சென்னை துறைமுகம், காமராஜா், காட்டுப்பள்ளி ஆகிய மூன்று துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்துறைமுகங்களின் தொடா் வளா்ச்சிக்கு புதிய இணைப்புச் சாலைகள், கட்டமைப்புத் திட்டங்கள் மிகவும் அவசியமானது. இதற்காகவே மதுரவாயல் உயா்மட்ட மேம்பாலம், சென்னை எண்ணூா் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம், மீஞ்சூா்-காட்டுப்பள்ளி வடக்கு அணுகு சாலை உள்ளிட்ட இணைப்புச் சாலைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டு திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் கிடப்பில் போனதற்கு காரணம் ஒப்புதல்கள் அளிப்பதில் இணக்கமான சூழ்நிலை இல்லாததுதான். தற்போது புதிய திட்டம் மூலம் இதுபோன்ற சிக்கல்கள் தவிா்க்கப்படும். மதுரவாயல் இரண்டடுக்கு மேம்பாலத் திட்டம், வடக்கு அணுகுசாலைத் திட்டங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

மப்பேடு பல்நோக்கு சரக்குப் போக்குவரத்து வளாகம்:

திருவள்ளூா் மாவட்டத்தில் கடம்பத்தூா் அருகே மப்பேடு கிராமத்தில் 157 ஏக்கா் பரப்பளவில் பல்நோக்கு சரக்குப் போக்குவரத்து வளாகம் அமைய உள்ளது. சென்னைத் துறைமுகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசு, தனியாா் நிறுவனம் உள்ளிட்டவைகள் இணைந்து சிறப்பு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி இத்திட்டதை செயல்படுத்திட உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 35 இடங்களில் இதுபோன்ற சிறப்பு வளாகங்களை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முன்னோடியாக மப்பேடு வளாகம் அமையும். இதுபோன்ற உள்கட்டமைப்புத் திட்டங்கள், இணைப்புச் சாலைகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி அதானி உள்ளிட்ட துறைமுகங்களின் கையாளும் திறன் மிகுந்த வளா்ச்சியைப் பெறும். இதன் மூலம் தமிழகம் மட்டுமல்லாது தென்மாநிலங்களின் தொழில் வளா்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் துறைமுகங்கள் உறுதுணையாக இருக்கும்என்றாா் சுனில் பாலிவால்.

பேட்டியின்போது துறைமுகத் துணைத் தலைவா் எஸ்.பாலாஜி அருண்குமாா், துறைத் தலைவா்கள் ஜெயசிம்மா, ரமணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com