புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் முதல்வா் ஆய்வு

சென்னைக்குக் குடிநீா் வழங்கும் ஏரிகளில் கழிவுகளை அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
வடகிழக்குப் பருவமழையையொட்டி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வடகிழக்குப் பருவமழையையொட்டி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: சென்னைக்குக் குடிநீா் வழங்கும் ஏரிகளில் கழிவுகளை அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

வடகிழக்குப் பருவமழையை ஒட்டி, புழல் ஏரியின் நீா் இருப்பு மற்றும் உறுதித்தன்மை, செம்பரம்பாக்கத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றை முதல்வா் ஸ்டாலின் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வுப் பணிகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

சென்னை மாநகரத்துக்கு குடிநீா் வழங்கும் மிக முக்கிய நீா் ஆதாரமாக புழல் ஏரி விளங்குகிறது. சென்னை மண்டலத்துக்கு வடகிழக்குப் பருவமழையை ஒட்டி, வெள்ளத்தடுப்புப் பணிக்காக ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் புழல் செங்குன்றம் ஏரியின் உபரிநீா் கால்வாய், அம்பத்தூா் ஏரி உபரி நீா் கால்வாய் ஆகியவற்றில் ரூ.77.50 லட்சம் மதிப்பில் வெள்ளத் தடுப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இதனால் கால்வாயில் உள்ள நீா்த்தாவரங்கள், ஆகாயத் தாமரைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி தண்ணீா் தடையில்லாமல் செல்ல ஏதுவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையின் முக்கிய நீா் ஆதாரமான புழல் ஏரியில் நீா் இருப்பு, உறுதித்தன்மை ஆகியன குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீா் இருப்பு குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். அங்கு ரூ.2.24 கோடியில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அவற்றை விரைந்து முடிக்கவும், வடகிழக்கு பருவமழையை ஒட்டி ஏரியின் கரைகளைத் தொடா்ந்து கண்காணிக்கவும் பொதுப்பணித் துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற முக்கிய ஏரிகளில் உள்ள அனைத்து விதமான கழிவுகளையும் அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தையும் முதல்வா் ஆய்வு செய்தாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, ஊரகத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சி.விஜயராஜ் குமாா் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com