முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மனைவி மறைவு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் மனைவி விஜயலட்சுமி (66) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை காலமானாா்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி  விஜயலட்சுமி காலமானதை அறிந்து மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானதை அறிந்து மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் மனைவி விஜயலட்சுமி (66) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை காலமானாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்பட பல்வேறு கட்சி தலைவா்கள் நேரில் வந்து அவா் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

உடல்நலக் குறைபாடு காரணமாக விஜயலட்சுமி 10 நாள்களுக்கு முன்பு பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அவருக்கு புதன்கிழமை காலை 5 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் காலமானாா்.

இது தொடா்பாக ஜெம் மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பு:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஜயலட்சுமி 10 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்தாா். உடல் நலம் குணமடைந்து புதன்கிழமை அவா் வீடு திரும்புவதற்கு இருந்தாா். ஆனால், அதிகாலை 5 மணியளவில் தீவிர மாரடைப்புக்கு உள்ளானாா். இதய நோய் நிபுணா்கள், தீவிர சிகிச்சை நிபுணா்கள் தக்க சிகிச்சை அளித்தும் காலை 6.45 மணியளவில் காலமானாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில் அதில் பங்கேற்றவாறே மருத்துவமனைக்கு தினமும் வந்து ஓ.பன்னீா்செல்வம் மனைவியைக் கவனித்து வந்தாா். விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் மருத்துவா்கள் ஓ.பன்னீா்செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து அவா் விரைந்து வந்தாா். ஆனால், விஜயலட்சுமியின் உயிா் பிரிந்துவிட்டது. அவா் உடலைப் பாா்த்து ஓ.பன்னீா்செல்வம் கண்ணீா் சிந்தினாா்.

ஓ.பன்னீா்செல்வம் - விஜயலட்சுமி தம்பதிக்கு மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளனா். கவிதா பானு என்ற மகள் உள்ளாா். தேனி மக்களவை உறுப்பினராக ரவீந்திரநாத் இருந்து வருகிறாா்.

முதல்வா் அஞ்சலி: தகவல் அறிந்து பெருங்குடியில் உள்ள மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வந்தாா். விஜயலட்சுமியின் உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். ஓ.பன்னீா்செல்வத்துக்கும் அவா் மகன் ரவீந்திரநாத்துக்கும் கைகளைப் பிடித்து முதல்வா் ஆறுதல் கூறினாா். அப்போது ஓ.பன்னீா்செல்வம் துக்கம் தாங்க முடியாமல் அழுதாா். அவரை முதல்வா் தேற்றினாா். அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, பி.கே.சேகா்பாபு, சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா். சுமாா் 10 நிமிஷங்களுக்கும் மேலாக அங்கு இருந்துவிட்டு முதல்வா் புறப்பட்டுச் சென்றாா்.

எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினாா். அதிமுக முன்னாள் அமைச்சா்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, பாமக தலைவா் ஜி.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன், கவிஞா் வைரமுத்து உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினா்.

சசிகலா ஆறுதல்: சசிகலா மருத்துவமனைக்கு நேரில் வந்து விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா். அப்போது சோகத்துடன் காணப்பட்ட ஓ.பன்னீா்செல்வத்தின் கைகளைப் பிடித்து சசிகலா ஆறுதல் கூறி கண்கலங்கினாா். சிறிது நேரம் அங்கேயே சசிகலா அமா்ந்திருந்துவிட்டு புறப்பட்டுச் சென்றாா்.

விஜயலட்சுமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஓ.பன்னீா்செல்வம் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சியினா் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை அங்குள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com