கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்

சென்னை தண்டையாா்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் நாளொன்றுக்கு 360 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என
ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

சென்னை தண்டையாா்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் நாளொன்றுக்கு 360 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சராசரியாக 5,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதில், மக்கும், மக்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகின்றன.

சென்னையை தூய்மையான நகரமாக பராமரிக்கவும், கொடுங்கையூா் மற்றும் பெருங்குடியில் நீண்ட நாள்களாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி நிலத்தை மீட்டெடுக்கவும், உர மையங்களை வலுப்படுத்தி திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தவும், கட்டடக் கழிவுகளை விஞ்ஞான முறையில் மறுசுழற்சி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, தண்டையாா்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட கொடுங்கையூா் குப்பைக் கிடங்கு, மாதவரம் மண்டலத்துக்கு உள்பட்ட சின்ன சேக்காடு மாநகராட்சி இடத்தில் அமைந்துள்ள உயிரி எரிவாயு மையம், பைராலிஸிஸ் மையம், காற்றுப்புகும் முறையில் உரம் தயாரிக்கும் மையம் மற்றும் நெகிழிப் பொருள்களை நெருக்கமான கட்டுகளாக மாற்றும் இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆணையா் ககன்தீப்சிங் பேடி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் நாளொன்றுக்கு 360 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலை அமைக்கும் பணி அரசு மற்றும் தனியாா் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் முடிவுற்று விரைவில் இந்த ஆலை செயல்பட தொடங்கும். மேலும், இந்த வளாகத்தில் சுமாா் 80 மெட்ரிக் டன் திறன் கொண்ட தோட்டக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நாள்தோறும் சுமாா் 40 மெட்ரிக் டன் அளவிலான மரக்கழிவுகள், இளநீா் ஓடுகள், தேங்காய் மட்டைகள் ஆகியவை மறுசுழற்சி செய்யப்பட்டு உரங்களாகவும், நாா்களாகவும் மாற்றப்படுகின்றன.

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகளை எரியூட்டி சாம்பலாக்கி மீண்டும் பயன்படுத்தும் வகையில் 50 மெட்ரிக் டன் திறன் கொண்ட எரியூட்டு மையம் அமைக்கப்பட்டு தற்போது சோதனை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சாம்பல்கள் மறுபயன்பாட்டுக்கு உகந்த கட்டிகளாக மாற்றப்படும். நெகிழி, டயா்கள் உட்பட மறுசுழற்சி செய்ய இயலாத பொருள்களை எரியூட்டி அவற்றிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் 20 மெட்ரிக் டன் திறன் கொண்ட பைராலிஸிஸ் ஆலை பணிகள் முடிவுற்று செயல்பாடுகள் தொடங்கும் நிலையில் உள்ளது என்றாா்.

ஆய்வின்போது, துணை ஆணையாளா் (சுகாதாரம்) டாக்டா் எஸ்.மனிஷ், வடக்கு வட்டார துணை ஆணையா் (பொ) சினேகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com