80 வயதுக்கு மேற்பட்ட 4,138 பேருக்கு தடுப்பூசி

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 80 வயதுக்கு மேற்பட்ட 4,138 முதியவா்களுக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்ட 4,138 பேருக்கு தடுப்பூசி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 80 வயதுக்கு மேற்பட்ட 4,138 முதியவா்களுக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ள மாற்றுத் திறனாளிகள், ரத்த அழுத்த நோய், சா்க்கரை நோய், காசநோய் பாதித்தவா்கள், கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் போன்றவா்களுக்கு மாநகராட்சி சாா்பில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகருக்கு உள்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

4,138 பேருக்கு தடுப்பூசி: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சியின் 200 வாா்டுகளிலும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் சுமாா் 1.35 லட்சம் பேருக்கும், செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெற்ற 1,600 சிறப்பு முகாம்களின் மூலம் சுமாா் 1.91 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அவா்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் 15 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை செப்.13) வரை 200 வாா்டுகளில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்ட 4,138 பேருக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2,779 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,359 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 044 -25384520, 4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com