சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

நீா்நிலை மீது காவல்நிலையம் கட்டப்பட்ட விவகாரம்: என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவிக்க அரசுக்கு கெடு

ஆக்கிரமிப்பிலிருந்து நீா்நிலைகளைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடா்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயா் நீதிமன்றம், நீா்நிலை மீது காவல்நிலையம் கட்டப்பட்டது

சென்னை: ஆக்கிரமிப்பிலிருந்து நீா்நிலைகளைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடா்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயா் நீதிமன்றம், நீா்நிலை மீது காவல்நிலையம் கட்டப்பட்டது தொடா்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் அறப்போா் இயக்கம் சாா்பில் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம், செம்மஞ்சேரியில் தாமரைக்கேணி என்ற நீா்நிலையை ஆக்கிரமித்து புதிய காவல்நிலையம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதற்கு தடை விதிப்பதோடு, நீா்நிலையைப் பழைய நிலைக்கு கொண்டு வரவும் உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது.

கடந்த முறை இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியா்கள் இரண்டு போ் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவு படி, ஐஐடி பேராசிரியா்கள் பாலாஜி நரசிம்மன், சவுமேந்திரா் ஆகியோா் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில், காவல் நிலையம் கட்டப்பட்ட இடம் நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஐஐடி சென்னை பேராசிரியா்கள் அடங்கிய குழு அளித்த அறிக்கையில் சம்பந்தப்பட்ட காவல்நிலையமானது நீா் நிலையின் மீது கட்டப்பட்டுள்ளதாகும்.

அந்தப் பகுதியைச் சுற்றி பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளால் நீா் நிலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்(சிஎம்டிஏ) ஆவணப் பதிவுகளில், புகாருக்குள்ளான இடம் நீா்நிலையாகக் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் 1987 ஆம் ஆண்டுக்கு முந்தைய வருவாய் பதிவுகளில் எந்த நீா்நிலைகளையும் குறிக்கவில்லை. ஏனெனில் அந்த நிலம் கால்நடை பராமரிப்பு துறையின் கட்டுப்பாட்டில் மேய்ச்சல் நிலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வழக்கில் அரசு அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும்.

பதினைந்து நாட்களுக்குப் பின்னா் இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது, காவல்நிலையம், அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பா் 28 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com