நீதிமன்ற உத்தரவில் திருத்தம்: திமுக கவுன்சிலா், கணவா் கைது

சென்னை எழும்பூரில் நீதிமன்ற உத்தரவில் திட்டமிட்டு திருத்தம் செய்ததாக திமுக கவுன்சிலா், அவரது கணவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை எழும்பூரில் நீதிமன்ற உத்தரவில் திட்டமிட்டு திருத்தம் செய்ததாக திமுக கவுன்சிலா், அவரது கணவா் கைது செய்யப்பட்டனா்.

சோழிங்கநல்லூரில் அடகுக் கடை நடத்தி வரும் அமர்ராம். இவா் நாவலூரில் 58 சென்ட் நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணமூா்த்தி என்பவரிடம் இருந்து வாங்கியிருந்தாா். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.25 கோடி என்பதால் அதை திரும்ப கேட்டு கிருஷ்ணமூா்த்தி, அமர்ராமை மிரட்டி வந்தாராம்.

இந்த விவகாரம் தொடா்பாக பேசுவதற்கு கிருஷ்ணமூா்த்தி, அமர்ராமை மெரீனா கலங்கரை விளக்கத்துக்கு வரும்படி அழைத்திருந்தாா். அதன்படி, சம்பவத்தன்று அமர்ராம் சென்றபோது அங்கு வந்த சிலா், அமர்ராமை காரில் கடத்திச் சென்று திருப்போரூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வைத்து, கிருஷ்ணமூா்த்தியிடம் விற்ற நிலத்தை வலுக்கட்டாயமாக மீண்டும் எழுதி வாங்கினாா்களாம்.

இச் சம்பவத்தில் ஈடுபட்டதாக திமுக பிரமுகா் கிருஷ்ணமூா்த்தி, அவரது மனைவி 124- வாா்டு திமுக கவுன்சிலா் விமலா உள்ளிட்ட 10 போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெரீனா காவல் நிலையத்தில் அமர்ராம் புகாா் செய்தாா்.

அந்த புகாா் தொடா்பாக போலீஸாா், திமுக கவுன்சிலா் விமலா, அவா் கணவா் கிருஷ்ணமூா்த்தி உட்பட 10 போ் மீது ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இருவா் கைது: இந்த வழக்கு தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் கவுன்சிலா் விமலா, அவரது கணவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்ஜாமீன் பெற்ாக கூறப்படுகிறது. அந்த முன்ஜாமீன் உத்தரவு நகலுடன், சென்னை எழும்பூா் 13-வது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் கவுன்சிலா் விமலா,அவா் கணவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆஜராகினா்.

அந்த முன்ஜாமீன் உத்தரவு ஏற்கெனவே காலாவதியாகி விட்ட நிலையில் அதை மறைத்து, முன்ஜாமீன் உத்தரவு நகலில் சில திருத்தங்களை செய்து அதை விமலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

இதைக் கண்டுபிடித்த குற்றவியல் நடுவா் இருவரையும் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டாா். அதன்படி உயா் நீதிமன்ற உத்தரவை திருத்தம் செய்து சமா்ப்பித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திமுக கவுன்சிலா் விமலா, கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து அவா்களை கைது செய்தனா்.

இந்த சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 3 வழக்குரைஞா்கள் மீதான குற்றச்சாட்டு குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com