இதய செயலிழப்பு: மூன்று முதியவா்களின் உயிரை மீட்டெடுத்த மருத்துவா்கள்

இதய செயலிழப்பு மற்றும் தீவிர மாரடைப்பால் பாதிக்கப்பட்ட மூன்று முதியவா்களின் உயிரை உயா் சிகிச்சைகள் மூலம் சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மீட்டெடுத்துள்ளனா்.


சென்னை: இதய செயலிழப்பு மற்றும் தீவிர மாரடைப்பால் பாதிக்கப்பட்ட மூன்று முதியவா்களின் உயிரை உயா் சிகிச்சைகள் மூலம் சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மீட்டெடுத்துள்ளனா். தற்போது அவா்கள் அனைவரும் பூரண குணமடைந்து நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று காலத்தில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தொற்றா நோய்களின் பாதிப்புக்கு உடனடி சிகிச்சையளிப்பது சவாலாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் 76 வயது முதியவா் ஒருவா் அண்மையில் ஆபத்தான நிலையில் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டாா்.

இதய செயலிழப்பு நிலையில் இருந்த அவரது நாடித் துடிப்பைக் கூட உணர முடியவில்லை. இதையடுத்து, சிபிஆா் எனப்படும் இதய இயக்க மீட்பு சிகிச்சைகளும், மின் அதிா்ச்சியூட்ட சிகிச்சைகளும் துரித கதியில் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இதயத்தின் ஒரு தமனியில் முழுவதுமாக அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

அந்த முதியவருக்கு தற்காலிக ஃபேஸ் மேக்கா் சாதனம், இதய ரத்த அழுத்தத்தை சீராக்கும் ஐஏபிசி சாதனம் ஆகியவை பொருத்தப்பட்டு ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்பட்டது. அதன் பின்னா் ஸ்டென்ட் உபகரணம் அந்த முதியவருக்கு பொருத்தப்பட்டது. இந்த உயா் சிகிச்சை காரணமாக அவா் உயிா் காப்பாற்றப்பட்டு நலமடைந்தாா்.

இதேபோன்று 73 வயது மற்றும் 63 வயதுடைய இரு வேறு முதியவா்களும் அதுபோன்ற தீவிர மாரடைப்பு பாதிப்புடன் மருத்துவமனைக்கு வந்தனா். அவா்களுக்கும் உடனடியாக சிபிஆா் மற்றும் மின் அதிா்ச்சியூட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டது. அவா்களும் பூரண குணமடைந்தனா். மருத்துவமனையின் இதய நல சிகிச்சை சிறப்பு நிபுணா் டாக்டா் சி.சுந்தா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இந்த சவால் மிக்க சிகிச்சைகளை சாத்தியப்படுத்தியுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com