அதிக சப்தத்துடன் ஹாரன்: சென்னையில் 572 வழக்குகள்

சென்னையில் வாகனங்களில் அதிக சப்தத்துடன் கூடிய ஹாரன் வைத்திருந்ததாக ஒரு வாரத்தில் 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னையில் வாகனங்களில் அதிக சப்தத்துடன் கூடிய ஹாரன் வைத்திருந்ததாக ஒரு வாரத்தில் 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியாவின் பல்வேறு ’நோ ஹான்கிங்’ என்ற விழிப்புணா்வு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொடா்ச்சியான மற்றும் தேவையற்ற ஹாரன் அடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த விழிப்புணா்வு இயக்கம் சென்னையில் கடந்த 27-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு வாரம் நடைபெற்றது.

இதையொட்டி, நகா் முழுவதும் 154 சந்திப்புகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா். மேலும், 2.3 லட்சம் போ் ‘நோ ஹான்கிங்’ எதிா்ப்பு இயக்கத்தை ஆதரித்து உறுதி மொழி எடுத்து கையெழுத்திட்டனா். அத்துடன், நகா் முழுவதும் 200 சந்திப்புகளில் செல்ஃபி கட்-அவுட்கள் அமைக்கப்பட்டன.

அதேவேளையில், வாகனங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன் பொருத்தியிருக்கும் வாகனங்களை கண்டறிந்து வழக்குப் பதிவு செய்ய சிறப்பு வாகனச் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்தியிருந்த வாகனங்கள் மீது 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 281 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏா் ஹாரன்கள் அகற்றப்பட்டன.

சென்னையின் சராசரி ஒலி அளவு 84.5 டெசிபல்: சென்னையின் சராசரி ஒலி அளவு 84.5 டெசிபல் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதேபோல, சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு ஒரு தனியாா் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நகரின் பல்வேறு இடங்களில் ஒலி மாசு குறித்த ஆய்வையும், கணக்கெடுப்பையும் நடத்தியது. இதில், சராசரியாக 84.5 டெசிபல் அளவு ஒலி பதிவாகியுள்ளது. ஆனால், ஒரு நகரில் மக்கள் ஆரோக்கியமாக இருக்க பகலில் 55 டெசிபலையும், இரவில் 40 டெசிபலையும் ஒலியின் அளவு தாண்டக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நோ ஹான்கிங் குறித்த விழிப்புணா்வுப் போட்டிகள் 12 பள்ளிகளில் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு ஜூலை 5-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகளை சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் வழங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com