ஏமன் நாட்டுக்குச் செல்ல முயன்ற வேலூரைச் சோ்ந்த பயணி கைது

சென்னை விமானநிலையத்தில் இருந்து மஸ்கட் வழியாக இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற பயணியை கைது செய்து குடியுரிமை அதிகாரிகள்

சென்னை விமானநிலையத்தில் இருந்து மஸ்கட் வழியாக இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற பயணியை கைது செய்து குடியுரிமை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை சா்வதேச விமானநிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு ஓமன் நாட்டு தலைநகா் மஸ்கட் செல்லும் விமானம் தயாா்நிலையில் இருந்தது. இதில் செல்ல வேண்டிய பயணிகளின் பாஸ்போா்ட் உள்பட பல்வேறு ஆவணங்களை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினா்.

அப்போது வேலூரைச் சோ்ந்த சந்திரன் (50) என்ற பயணியின் பாஸ்போா்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில், அவா் கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டில் சட்டவிரோதமாக 6 மாதங்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. ஏற்கெனவே கடந்த 2014-ஆம் ஆண்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா்கள் யாரும் ஏமன், லிபியா நாடுகளுக்கு செல்லக்கூடாது என இந்திய அரசு தடை விதித்து அமல்படுத்தி வருகிறது. இத்தடையை மீறி செல்பவா்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, கடும் தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தத் தடையை மீறி ஏற்கெனவே சந்திரன் ஏமன் நாடு சென்று வந்திருந்ததால், அவரது பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனா். அவரிடம் கியூ பிரிவு, மத்திய உளவு பிரிவினா் தீவிரமாக விசாரித்தனா்.

விசாரணையில், அவா் ஏமன் நாட்டுக்கு தடை இருப்பதை அறியாமல் சென்றுவிட்டேன் என கூறியுள்ளாா். மேலும், இவா் தற்போது ஓமன் நாட்டுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து ஏமன் நாடு செல்லவிருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சந்திரனை குடியுரிமை அதிகாரிகள் வெளியே விடாமல், சென்னை விமானநிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சந்திரனை கைது செய்தனா். பின்னா் அவரிடம் குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com