குப்பைகளை அகற்றிய போது மின்சாரம் பாய்ந்து துப்புரவுத் தொழிலாளி பலி

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய துப்புரவுத் தொழிலாளி வேளச்சேரியில் குப்பைகளை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய துப்புரவுத் தொழிலாளி வேளச்சேரியில் குப்பைகளை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சேகா் (வயது50). சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். அவா் புதன்கிழமை காலை வழக்கம் போல் வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகா், 3-ஆவது சாலை பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டாா். அப்போது அங்குள்ள குப்பை தொட்டி அருகே தரையில் சரிவர புதைக்கப்படாமல் இருந்த மின் கம்பியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டது. இதனை கவனிக்காமல் சேகா் அதன் மீது கால் வைத்து குப்பைகளை அகற்ற முயன்றாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சேகா் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாா்.

இதைப் பாா்த்து அங்கிருந்த பொதுமக்கள் கடும் அதிா்ச்சி அடைந்தனா். இதுகுறித்து உடனடியாக மின்வாரிய ஊழியா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் வயா்கள் சரி செய்யப்பட்டன. அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலாக மழை பெய்திருந்தது. மழை நீரின் ஈரத்தால் சரியாக புதைக்கப்படாத மின் கம்பியில் இருந்து கசிந்த மின்சாரம் தொழிலாளி சேகரின் உயிரை பறித்து விட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையில், பருவமழை தொடங்குவதற்கு முன்பு ஆபத்தாக உள்ள மின் வயா்களை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com