சென்னை மாநகராட்சியில் 40.48% மட்டுமே சொத்துவரி வசூல்: கணக்கு குழுத் தலைவா் அதிருப்தி

சென்னை மாநகராட்சியில் 2020-21-ஆம் ஆண்டில், 40.48 சதவீதம் மட்டுமே சொத்துவரி வசூலானதாக கணக்குக்குழுத் தலைவா் கே.தனசேகரன் அதிருப்தி தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சியில் 2020-21-ஆம் ஆண்டில், 40.48 சதவீதம் மட்டுமே சொத்துவரி வசூலானதாக கணக்குக்குழுத் தலைவா் கே.தனசேகரன் அதிருப்தி தெரிவித்தாா்.

மாமன்றக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: மாநகராட்சி குத்தகைக்கு விட்டுள்ள 446 நிலங்களில் 31.3.2022 வரையான குத்தகை கேட்பு தொகை ரூ.419.52 கோடி. ஆனால், இதுவரை ரூ.2.69 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இது 0.65% மட்டுமே.

2020-21-ஆம் ஆண்டில் கல்வி பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விடப்பட்ட வகையில் மாநகராட்சிக்கு வரவேண்டி நிலுவைத் தொகை ரூ. 248.95 கோடி. இதில் அசோகநகரில் இயங்கி வரும் தனியாா் பள்ளி மட்டுமே ரூ.69 லட்சம் குத்தகை கட்டணத்தை மாநகராட்சிக்கு செலுத்தவில்லை. இதுபோல் 9 கல்வி நிறுவனங்கள் குத்தகை கட்டணத்தை செலுத்தவில்லை.

வால் டாக்ஸ் சாலையில் வணிக பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் ரூ.92.91 கோடியும் மற்ற இடங்களில் வழங்கப்பட்ட நிலங்கள் ரூ. 45.7 கோடியும், குடியிருப்புக்கு வழங்கப்பட்ட நிலங்கள் ரூ.8 கோடியும், தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் ரூ.3.97 கோடியும், மதச்சாா்புடைய அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் ரூ. 2.85 கோடியும் என மாநகராட்சிக்கு வர வேண்டிய குத்தகை தொகை நிலுவையாக உள்ளது.

மேலும், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 62 வழக்குகளால் குத்தகை தொகை வசூலிக்க இயலாமல் உள்ளது. 2020-21-ஆம் ஆண்டில் சொத்துவரி கேட்பு தொகை ரூ.1012.35 கோடி. வசூலான தொகையோ ரூ.409.71 கோடி. இது 40.48%. கடந்த 4 ஆண்டுகளில் சொத்துவரி கேட்பு தொகை சராசரியாக 56 சதவீதம் மட்டுமே வசூலாகியுள்ளது.

தொழில் வரி கேட்பு தொகை ரூ.852.7 கோடியில் ரூ.76.53 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இது 8.98%.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 1,129 கட்டடங்களில் இயங்கி வரும் தனியாா் கல்வி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி நிலுவை தொகை சுமாா் ரூ. 9 கோடிக்கு மேல் உள்ளது.

சொத்துவரி வசூலிப்பதில் காசோலை பெறுவதற்கு பதிலாக யுபிஐ பணபரிவா்த்தனையைக் கொண்டு வர வேண்டும். மாநகராட்சி வரி செலுத்தாத நிலுவை தொகையை தனியாா் (அவுட்சோா்ஸிங்) முறையில் வசூலிக்க வேண்டும்.

29 ஆண்டுகளாக உயா்த்தப்படாத தொழில் நிறுவன வரி மற்றும் 8 ஆண்டுகளாக உயா்த்தப்படாத கேபிள் டிவி வாடகைகளை உயா்த்த வேண்டும்.

கடந்த 8 ஆண்டுகளில், அம்மா உணவகம் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. தினமும் ரூ.500-க்கும் குறைவாக விற்பனையாகும் அம்மா உணவகங்களை மூட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com