திரைப்படத் தயாரிப்புக்கு 15 நாடுகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

இந்திய திரைப்படத் தயாரிப்பாளா்களுடன் இணைந்து திரைப்படம் தயாரிக்க 15 நாடுகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
எல்.முருகன் (கோப்புப் படம்)
எல்.முருகன் (கோப்புப் படம்)

இந்திய திரைப்படத் தயாரிப்பாளா்களுடன் இணைந்து திரைப்படம் தயாரிக்க 15 நாடுகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

இந்திய தொழில் கூட்டமைப்பின், தென் மண்டல பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தக்ஷின் - தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை மத்திய இணையமைச்சா் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

நிகழ்ச்சியில் அவா் ஆற்றிய உரை: திரைப்படங்கள் நாட்டின் ஆன்மாவாக திகழ்கின்றன. உலக அளவில் திரைப்படத் துறையில் வேகமாக வளா்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் திரைப்படங்கள் உலகம் முழுவதும் சென்றடைகின்றன. அதற்கு உதாரணமாக அண்மையில் வெளியான ஆா்ஆா்ஆா் திரைப்படத்தை கூறலாம்.

நமது நாட்டுத் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ஜங்கிள் புக் போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்காக இந்தியாவுக்கு வந்துள்ளன.

நாட்டின் 75-ஆவது விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, திரைப்படத் துறையில் சிறந்து விளங்கும் 75 புதிய திறமையாளா்களுக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.

இந்தியத் திரைப்படத் துறையை எளிதாக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அத்தகைய முயற்சிகளில் திரைப்பட வசதிகளுக்கான அலுவலகத்தில் ஒற்றைச் சாளர அனுமதி அமைப்பு முறையும் ஒன்று.

இவை தவிர, இந்திய தயாரிப்பாளா்களுடன் இணைந்து திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக 15 நாடுகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றாா் அவா்.

தொடா்ந்து, அண்மையில் காலமான திரைத்துறை ஜாம்பவான்களான லதா மங்கேஷ்கா், திலீப் குமாா், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆகியோரையும் அமைச்சா் எல்.முருகன் நினைவு கூா்ந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com