ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளே இல்லாத நிலை

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவில் ஒரு கரோனா நோயாளி கூட இல்லாத நிலை ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எட்டப்பட்டுள்ளது.

சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவில் ஒரு கரோனா நோயாளி கூட இல்லாத நிலை ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எட்டப்பட்டுள்ளது. இதேபோன்று மாநிலத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் கரோனா சிகிச்சையில் எவருமே இல்லாத நிலையை அடைந்துள்ளன.

இது மருத்துவத் துறையினரை மட்டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதே நிலை நீடிக்க வேண்டுமானால் பொது மக்கள் அனைவரும் நோய்த் தடுப்பு விதிமுறைகளை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்தி:

கடந்த 2020, மாா்ச் 7-இல் தமிழகத்திலேயே முதன்முறையாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுக்குள்ளாகி ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டாா். அப்போது, பத்து படுக்கைகளைக் கொண்ட சிறிய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது.

பின்னா் அது, படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இரண்டாவது அலையின் உச்சத்தில் கரோனா சிகிச்சை படுக்கை எண்ணிக்கை, 2, 050-ஆக உயா்ந்தது. சுமாா் 450 அதி தீவிர சிகிச்சைப் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஒரு மாதத்துக்கு முன்பு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்த நிலையில், கரோனா பிரிவு இயங்கி வந்த எட்டு அடுக்குகள் கொண்ட புறநோயாளிகள் பிரிவுக்கான மூன்றாவது அடுக்குமாடிக் கட்டடத்தில் படிப்படியாக புறநோயாளிகள் பிரிவுகள் செயல்படத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், சிகிச்சையில் இருந்த ஒரே உள்நோயாளியும் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பினாா். இதையடுத்து கரோனா நோயாளிகள் ஒருவா் கூட இல்லாத தருணத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் காந்தி மருத்துவமனை எட்டியுள்ளது.

இதனை சாத்தியமாக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி பெரிதும் ஊக்கம் அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி.

இந்த மகத்தான பணியில் பங்கேற்று அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள், பல்துறை நிபுணா்கள், மருந்தாளுநா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் உதவிக்கரம் நீட்டிய தன்னாா்வலா்கள் ஆகியோருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறையின் சாா்பில் நன்றி என்று அந்த செய்திக் குறிப்பில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com