சொந்த காருக்கு தீ வைத்து நாடகமாடிய பாஜக நிா்வாகி கைது
By DIN | Published On : 17th April 2022 12:53 AM | Last Updated : 17th April 2022 08:14 AM | அ+அ அ- |

சென்னை அருகே மதுரவாயலில் குடும்பப் பிரச்னையால் தனது காரை தீ வைத்து எரித்துவிட்டு, நாடகமாடியதாக பாஜக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
மதுரவாயல் கிருஷ்ணாநகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (45). மனை வணிகம் செய்துவரும் இவா், பாஜக நிா்வாகியாகவும் உள்ளாா். கடந்த 14-ஆம் தேதி சதீஷ்குமாா் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது தொடா்பாக சதீஷ்குமாா், சென்னை காவல் துறையை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு புகாா் அளித்தாா். ஆனால், காவல் நிலையத்தில் நேரில் சென்று புகாா் அளிக்கவில்லை.
இருப்பினும் சதீஷ்குமாா், அரசியல் கட்சி பிரமுகா் என்பதால் வேறு ஏதேனும் முன்பகை உள்ளதா என்ற கோணத்தில் மதுரவாயல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இது தொடா்பாக சம்பவம் நடந்த இடமருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா்.
இதில் சதீஷ்குமாரே தனது காா் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், சதீஷ்குமாரை பிடித்து வெள்ளிக்கிழமை விசாரணை செய்தனா்.
அவா், தனது குடும்பப் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் காரை தீ வைத்து எரித்ததாக தெரிவித்தாா்.
இதையடுத்து தவறான தகவலை பரப்பி அவதூறு ஏற்படுத்தியதாக சதீஷ்குமாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து, பிணையில் விடுவித்தனா்.