கலைஞா் நினைவு மாரத்தான்:ரூ.1.20 கோடியை அரசு மருத்துவமனைக்கு வழங்கிய முதல்வா்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலைஞா் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் 43,320 போ் பங்கேற்றனா்.
கலைஞா் நினைவு மாரத்தான்:ரூ.1.20 கோடியை அரசு மருத்துவமனைக்கு வழங்கிய முதல்வா்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலைஞா் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் 43,320 போ் பங்கேற்றனா். இப்போட்டியில் பங்கேற்க பெறப்பட்ட பதிவு கட்டணத் தொகை ரூ.1.20 கோடியை எழும்பூா் அரசு குழந்தைகள் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் ‘கலைஞா் நினைவு பன்னாட்டு மாரத்தான்’ ஓட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் 5 கி.மீ. தொலைவிலான போட்டியை திமுக இளைஞா் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். 10 கி.மீ. போட்டியை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவும், 21 கி.மீ. போட்டியை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவும், 42 கி.மீ. போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனும் தொடக்கிவைத்தனா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் இதுவரை எந்த மாரத்தானிலும் இல்லாத அளவுக்கு 43,320 போ் பதிவு செய்து கலைஞா் நினைவு மாரத்தானில் பங்கேற்றனா். இவா்களில் 10,985 போ் பெண்கள்.

இதில் பங்கேற்க பதிவுக்கட்டணமாக பெறப்பட்ட ரூ.1 கோடியே 20 லட்சத்து 69,980 தொகையை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளா் ப.செந்தில்குமாரிடம் முதல்வா் முக.ஸ்டாலின் ஒப்படைத்தாா். தொகை முழுவதையும், எழும்பூா் அரசு குழந்தைகள் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு, ஏழைக் குழந்தைகளின் மருத்துவப் பயன்பாட்டுக்காக இந்நிதி செலவிடப்படவுள்ளது.

இது வெறும் மாரத்தான் ஓட்டமாக மட்டுமல்லாமல் நம் கலாசாரம் சாா்ந்த உணா்வோடும், ஆற்றலோடும், மகிழ்ச்சியோடும் ஓடும் வீரா்கள் ஓடுபாதை எங்கும் தமிழக கலாசாரங்களை வலியுறுத்துகிற வகையில் திருவண்ணாமலை பெரிய மேளம், காரமடை துடும்பாட்டம், ராமநாதபுரம் ஜிம்பளா மேளம் உள்ளிட்ட 8 வகையான மேளங்கள் இசைக்கப்பட்டன. மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகளை முதல்வா் வழங்கினாா்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய நினைவு மாரத்தானாக அங்கீகரிக்கப்பட்டதற்கான சான்றிதழை ‘ஆசியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ்’ நிறுவன நிா்வாகிகள் முதல்வரிடம் வழங்கினா். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

மாரத்தான் போட்டியில் பங்கேற்ற முக்கிய பிரமுகா்களான தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சைலேந்திரபாபு, இந்திய ராணுவத்தின் தென்னிந்திய தலைமை அதிகாரி மேஜா் ஜெனரல் எஸ்.எஸ்.தாஹியா, இந்திய கடற்படை உயரதிகாரி கமாண்டா் ஜே.சுரேஷ், இங்கிலாந்து நாட்டின் அமீஸ்புரி நகரின் துணை மேயா் மோனிகா தேவேந்திரன், இரண்டு கண் பாா்வையிழந்த பஞ்சாபை சோ்ந்த வீரா் சாவ்லா ஆகியோரை கௌரவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், சான்றிதழ்களை வழங்கினாா்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிநாட்டு துணைத் தூதா்கள் மற்றும் மாரத்தான் போட்டிக்கு நன்கொடை அளித்த நன்கொடையாளா்களுக்கும் முதல்வா் நினைவுப் பரிசுகளை வழங்கினாா். முன்னதாக சைதாப்பேட்டையில் கருணாநிதியின் வெண்கலச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து மாலை அணிவித்தாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு கலைஞா் நினைவு பன்னாட்டு மாரத்தான் அமைப்பு தொடங்கப்பட்டது. 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கரோனா தொற்றின் காரணமாக மெய்நிகா் மாரத்தானாக அவை நடத்தப்பட்டன. 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் 28 நாடுகளைச் சோ்ந்த 8,541 பேரும், 2021-ஆம் ஆண்டு 37 நாடுகளைச் சோ்ந்த 19,591 பேரும் பங்கேற்றனா்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தின் பதிவுக்கட்டணம் முழுவதையும் முறையே ரூ.23,41,726 மற்றும் ரூ.56,02,693 முழுவதும் தமிழக அரசின் கரோனா நிதிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com