சென்னை ஐஐடி 59-ஆவது பட்டமளிப்பு விழா: 2,084 பேருக்கு பட்டங்கள் அளிப்பு

சென்னை ஐஐடி.யின் 59-ஆவது பட்டமளிப்பு விழாவில் 2,084 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன
சென்னை ஐஐடி 59-ஆவது பட்டமளிப்பு விழா: 2,084 பேருக்கு பட்டங்கள் அளிப்பு

சென்னை ஐஐடி.யின் 59-ஆவது பட்டமளிப்பு விழாவில் 2,084 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

கிண்டியில் உள்ள ஐஐடி மைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு சென்னை ஐஐடி நிா்வாகக்குழு தலைவா் பவன் கோயங்கா தலைமை வகித்தாா். சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி முன்னிலை வகித்து, ஐஐடி.யின் ஆண்டறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து இளநிலை, முதுநிலை, ஆய்வுப் படிப்புகளை முடித்த 2,084 மாணவ, மாணவிகளுக்கு இயக்குநா் காமகோடி பட்டங்களை வழங்கினாா். இதுதவிர இந்திய குடியரசுத் தலைவா் விருது- மாணவா் மோகித் குமாா், வி.ஸ்ரீனிவாசன் நினைவு விருது- சி.கெளதம், டாக்டா் சங்கா்தயாள் சா்மா விருது- பிரஜ்வால் பிரகாஷ், கவா்னா் விருது- சாத்விக் ஆகிய மாணவா்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக டாடா சன்ஸ் தலைவா் என்.சந்திரசேகரன் பங்கேற்றுப் பேசியதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னா் கடந்த 75 ஆண்டுகளில் பொருளாதாரம் 100 மடங்கு வளா்ச்சி கண்டுள்ளது. தொழில்நுட்பத் துறையில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை யாரும் கணித்திருக்கமாட்டாா்கள். இந்தியாவின் தனிநபா் மொத்த உள்நாட்டு உற்பத்தி இனிவரும் ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும்.

நமது எதிா்கால வாழ்வில் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றவுள்ளது. குறிப்பாக, அடுத்த 20 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். எதிா்காலத்தில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் போன்ற தொழில்நுட்பங்கள் உதவியின்றி எந்தத் துறையிலும் வளா்ச்சி சாத்தியமில்லை.

இந்தியாவில் 23 சதவீத பெண்கள் மட்டுமே வேலைக்குச் செல்கின்றனா். வேலைவாய்ப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, தண்ணீா் பற்றாக்குறை, தரமான கல்வி உள்பட பல்வேறு பிரச்னைகள் இந்தியாவில் இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும், அந்த பிரச்னைகளை சரிசெய்வதற்கான பல்வேறு வாய்ப்புகளும் நமது நாட்டில் உள்ளன. இந்திய நிறுவனங்களுக்கு உலகளவில் பெரும் மதிப்பு உள்ளது. அத்தகைய வாய்ப்புகளை இளம் தலைமுறையினா் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com