இஸ்லாமியா் நல நிதி வசூலிப்பு: நடவடிக்கை கோரிய மனு வாபஸ்

இஸ்லாமியா்களின் நலனுக்கு எனக் கூறி பணம் வசூலிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது.

சென்னை: இஸ்லாமியா்களின் நலனுக்கு எனக் கூறி பணம் வசூலிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது.

சென்னை உயா் நீதிமன்றத்தில், ஜகுஃபா் சாதிக் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு உதவுவதாகவும், மேலும், பல்வேறு நலப்பணிகளை மேற்கொள்வதாகவும் கூறி பணம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு வசூலிக்கப்படும் பணம் சட்ட விரோதக் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் சிறாா்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதனால், அப்பாவி இஸ்லாமிய இளைஞா்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது ஆவடி காவல் துறையினா் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டப்படும் நபா்களை எதிா்மனுதாரராக சோ்க்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நபா்களை சோ்த்து புதிய மனு தாக்கல் செய்வதாகக் கூறி, வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கும்படி மனுதாரா் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com