அம்பத்தூர் தொகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

அம்பத்தூர் தொகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அம்பத்தூர் தொகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆவடி: அம்பத்தூர் தொகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அம்பத்தூர் தொகுதியில் பல ஆண்டாக அரசு பொது மருத்துவமனை இன்றி பொதுமக்கள், தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாடி, கொரட்டூர், ஜெ.ஜெ.நகர், பாடிகுப்பம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மேற்கண்ட பகுதிகளில் 5 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 1800 மேற்பட்ட சிறிய, பெரிய கம்பெனிகள் உள்ளன. மேலும், இங்கு 100-க்கு மேற்பட்ட ஏற்றுமதி ஆடை நிறுவனங்களும், மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அமைந்துள்ளன. 

அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள தொழிற்சாலைகளில் வட மாநிலத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு வரும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வாகன போக்குவரத்தை நம்பி வருகின்றனர். 

இந்த பகுதியில் சி.டி.எச் சாலை, அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை, அம்பத்தூர்-வானகரம் சாலை, கொல்கத்தா நெடுஞ்சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை நெடுஞ்சாலை, தாம்பரம்-புழல் புறவழிச் சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. மேற்கண்ட சாலைகளின் வழியாக தான் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். இதனால் அம்பத்தூர் பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதன் காரணமாக அடிக்கடி சாலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் படுகாயம் அடைவதுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது. 

கடந்த சில ஆண்டுகளில் மேற்கண்ட  சாலைகளில் விபத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும்  தொழிற்சாலைகளில் இயந்திரங்களில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும், கட்டிடங்களில் வேலை செய்யும் போது கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் அரசு மருத்துவமனை இல்லை.  இதனால் விபத்தில் காயமடைந்தவர்களை அவசர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. 

இவ்வாறு சென்னைக்கு சிகிச்சைக்கு செல்லும் போது சி.டி.எச் சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் காரணமாக பல சமயங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாக செல்ல முடியவில்லை. படுகாயம் அடைந்தவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு செல்ல முடியாததால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு பல ஆண்டுகளாக பல உயிர் பலிகள் நிகழ்ந்து உள்ளன. 

இதனை தவிர்க்க அம்பத்தூரில் படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு பொது மருத்துவமனை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, இனி மேலாவது அம்பத்தூர் தொகுதியில் பொதுமக்கள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் படுக்கை வசதிகள் கூடிய நவீன அரசு பொது மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com