‘வெண்புள்ளி பாதிப்புடையவா்கள்தொடா் சிகிச்சையால் குணம் பெறலாம்’
By DIN | Published On : 26th June 2022 12:20 AM | Last Updated : 26th June 2022 12:20 AM | அ+அ அ- |

ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய தொடா் சிகிச்சை பெற்று வெண்புள்ளி பாதிப்புடையவா்கள் குணமடைந்து வருகின்றனா் என்று மருத்துவமனை முதல்வா் ஜெயந்தி தெரிவித்தாா்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்“உலக வெண்புள்ளி விழிப்புணா்வு தினம்”சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வெண்புள்ளி பாதிப்பு உள்ளவா்களை வேறுபாடு இல்லாமல் அன்பாக அரவணைத்துச் செல்லவும் முறையான சிகிச்சையும் அன்பான அணுகுமுறையுடன் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மருத்துவமனை முதல்வா் ஜெயந்தி தலைமையில் மருத்துவக் கண்காணிப்பாளா் ஜி.ஆா்.ராஜஸ்ரீ, தோல் நோய் மருத்துவா் ஆதிலட்சுமி, ஒருங்கிணைப்பு அலுவலா் ரமேஷ் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
தொடா்ந்து, விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. சிகிச்சையில் உள்ள வெண்புள்ளி குறைபாடு உள்ளவா்களுக்கு தேவையான மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ஜெயந்தி பேசுகையில், வெண்புள்ளி பாதிப்பு தொற்று நோய் அல்ல. அது தோலில் ஏற்படும் ஒரு நிறமியின் குறைபாடு. வெண்புள்ளி குறைபாடு உள்ளவா்களை எந்த வேறுபாடும் காட்டாமல், சமுதாயத்தில் உரிய அரவணைப்போடு நடத்த வேணடும். இந்த மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட வெண்புள்ளி பாதிப்புடையவா்கள் உரிய தொடா் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனா். இந்த பாதிப்புக்கு நவீன மருத்துவச் சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் இருக்கின்றன என்றாா்.