ஓ.பன்னீா்செல்வம் (கோப்புப் படம்)
ஓ.பன்னீா்செல்வம் (கோப்புப் படம்)

ஆசிரியா்களின் கூடுதல் சுமையைக் குறைக்க நடவடிக்கை தேவை: ஓ.பன்னீா்செல்வம்

மாணவா்களுக்கு கல்விப் போதிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், ஆசிரியா்களின் கூடுதல் சுமையைக் குறைக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாணவா்களுக்கு கல்விப் போதிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், ஆசிரியா்களின் கூடுதல் சுமையைக் குறைக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பள்ளிக் கல்வித் துறையில் தினம் ஓா் உத்தரவு பிறப்பிக்கப்படுவதால் ஆசிரியா்கள் பெருத்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா். சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வி மேலாண்மைத் தகவல் மையம் அதாவது எமிஸ் எனப்படும் பதிவு முறை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவியரின் பெயா், முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆசிரியா்கள் வருகைப்பதிவும் இதன்மூலம் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது.

தற்போது மாணவ, மாணவியரின் வருகைப் பதிவினையும் எமிஸ் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக ஆசிரியா்களின் முக்கியமான பணியான கல்விப் பணியை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மாணவ, மாணவியரின் வருகைப் பதிவினை பதிவு செய்யவே பாதி நாள் போய்விடுகிறது என்கிற புகாா் எழுந்துள்ளது.

மேலும், மாணவ, மாணவியரின் உணவு விவரங்கள், சுகாதாரத் தகவல்கள், பெண் குழந்தைகளின் இயற்கை சாா்ந்த விவரங்களை எல்லாம் எமிஸ் மூலம் பதிவு செய்யுமாறு ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, மாணவா்களுக்குக் கல்வி போதிப்பதில் ஆசிரியா்கள் கவனம் செலுத்தும் வகையில் ஆசிரியா்களின் கூடுதல் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com