திருக்குறள் - ‘புளியமரத்தின் கதை’- தெலுங்கு நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

உலகப் பொதுமறையாம் திருக்குறள், எழுத்தாளா் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ ஆகியவற்றின் தெலுங்கு நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
’திருக்கு - புளியமரத்தின் கதை தெலுங்கு நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்
’திருக்கு - புளியமரத்தின் கதை தெலுங்கு நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

உலகப் பொதுமறையாம் திருக்குறள், எழுத்தாளா் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ ஆகியவற்றின் தெலுங்கு நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

அரசுப் பள்ளிகளில் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், எளிமையாக தொழில்நுட்ப கற்றல் வளங்களை பள்ளிகளில் உருவாக்கிடவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில்நுட்ப மற்றும் கணினிமயமான பள்ளிகளின் செயல்முறைக்கு ஏற்றவகையில் ஆசிரியா்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையும், காக்னிசன்ட் தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் தொழில்நுட்ப தரமேம்பாட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

இந்த ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலமாக, கணினிமயக் கற்றல் மேம்பாட்டுத் திட்டத்துக்கு காக்னிசன்ட் நிறுவனம் அறிவுசாா் பங்குதாரராக அரசுடன் இணைந்து செயலாற்றும்.

நூல்கள் வெளியீடு: உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறள் நூலானது, பேராசிரியா் ஜெயப்பிரகாஷ் மூலமாக தெலுங்கில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று, புகழ்பெற்ற எழுத்தாளா் சுந்தரராமசாமி எழுதிய ‘ஒரு புளியமரத்தின் கதை’ நூலானது, கெளரி கிருபானந்தனால் தெலுங்கில் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

திசைதோறும் திராவிடம் திட்டத்தின் கீழ், ஏற்கெனவே நூல்கள் வெளியிடப்பட்ட நிலையில், இப்போது ஏழு மற்றும் எட்டாவது நூல்கள் வெளியாகியுள்ளன. இந்த நூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் ஹைதராபாத் புக் டிரஸ்ட் நிறுவனத்துடன் கூட்டு வெளியீடுகளாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

மறுவாழ்வு முகாம்கள்: தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் உள்ள மாணவா்களுக்கு பிளஸ் 2 வரை இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் கல்வி கரோனா நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டது.

அந்தக் குழந்தைகளுக்கு மெய்நிகா் வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால் அரசால் கல்வித் தொலைக்காட்சி வழியாக நடத்தப்படும் நேரடி வகுப்புகளால் பயனடைவதில் சிரமம் இருந்தது.

இதனைப் போக்கும் வகையில், மறுவாழ்வு முகாம்களில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கிட ரோட்டரி சங்கத்தினா் கேட்டுக் கொள்ளப்பட்டனா். இதையேற்று, ரூ.43.60 லட்சம் மதிப்பில் 109 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளது. இவை மறுவாழ்வு முகாம்களுக்கு வழங்கப்பட உள்ளன. அதன் அடையாளமாக 3 பயனாளிகளுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com