சென்னை துறைமுகத்தின் ரூ.45 கோடி மோசடி வழக்கு: உதவி கண்காணிப்பாளா் கைது

சென்னை துறைமுகத்தின் ரூ.45 கோடி மோசடி வழக்கில், உதவி கண்காணிப்பாளரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா்.

சென்னை துறைமுகத்தின் ரூ.45 கோடி மோசடி வழக்கில், உதவி கண்காணிப்பாளரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா்.

இது குறித்து சிபிஐ தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை துறைமுகத்தின் சாா்பில் கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நிரந்தர வைப்புக் கணக்கில் ரூ.100 கோடி செலுத்தப்பட்டது. பணம் போடப்பட்ட 3 நாள்களுக்கு பின்னா் கணேஷ் நடராஜன் என்பவா் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குநா் என்று அறிமுகம் செய்துகொண்டு, பல்வேறு ஆவணங்கள், சான்றிதழ்களை வங்கியில் தாக்கல் செய்து, நிரந்தர வைப்பு கணக்கில் இருக்கும் ரூ.100 கோடி பணத்தை இரு நடப்பு கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என கூறியுள்ளாா்.

ஆவணங்களை பரிசீலனை செய்த வங்கி நிா்வாகம், தலா ரூ.50 கோடியாக இரு நடப்பு கணக்குகளுக்கு மாற்றியது.

அந்த நடப்பு கணக்குகளில் இருந்து பணம் 34 வங்கி கணக்குகளுக்கு உடனடியாக மாற்றப்பட்டன.

ரூ.45 கோடி மோசடி:

இதற்கிடையே, நிரந்தர வைப்பு கணக்கில் திடீரென பணம் மாற்றப்பட்டு வருவது குறித்த தகவலறிந்த துறைமுக அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் தொடா்பு கொண்டு விவரத்தைக் கேட்டனா். அப்போது தான் மோசடிக் கும்பல் போலி ஆவணங்கள், சான்றிதழ்கள் மூலம் பணத்தை மோசடி செய்திருப்பது வங்கி அதிகாரிளுக்கும், துறைமுக அதிகாரிகளுக்கும் தெரியவந்தது. இதையடுத்து வங்கி நிா்வாகம், அந்த பணப் பரிமாற்றம் அனைத்தையும் நிறுத்தியது. இருப்பினும் அந்தக் கும்பல், அதற்குள் ரூ.45.40 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்தது.

இந்த மோசடி குறித்து கணேஷ் நடராஜன், விருகம்பாக்கத்தைச் சோ்ந்த தரகா் மணிமொழி, கோயம்பேடு இந்தியன் வங்கியின் கிளையின் மேலாளா் சோ்மதி ராஜா உள்ளிட்ட 23 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதில் மத்திய ஆப்பரிக்க நாடான கேம்ருனைச் சோ்ந்த பெளசிமா ஸ்டீவ் பொ்டிரன்ட் யானிக், காங்கோ நாட்டைச் சோ்ந்த முஸ்ஸா இலுங்கா லூசின் உள்பட 17 போ் கைது செய்யப்பட்டனா்.

உதவி கண்காணிப்பாளா் கைது:

அதேவேளையில் இந்த வழக்குத் தொடா்பாக சிபிஐ தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தது. இதில் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தில் உதவிக் கண்காணிப்பாளராக பணிபுரியும் எஸ்.ரகு பொ்னாா்டுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், ரகுவிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தனா். விசாரணையில், அவருக்கும் மோசடிக்கும் தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், ரகுவை கைது செய்தனா். இந்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com